நேருவுக்கு இருந்த துணிவு மோடிக்கு இல்லை – சான்றுடன் பழ.நெடுமாறன் விமர்சனம்

நிறவெறி -ஆணாதிக்கத் திமிருடன் இந்தியர்களை விரட்டிய ட்ரம்ப் விசயத்தில் பிரதமர் மோடியின் செயலை விமர்சித்திருக்கிறார் பழ.நெடுமாறன்.

இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது….

பிப்ரவரி 5 ஆம் நாள் அன்று அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவைச் சேர்ந்த 104 பேர்களை அமெரிக்கா வெளியேற்றியது முக்கியமானதல்ல. மாறாக, 104 இந்தியர்களுக்கும் கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்க இராணுவ விமானம் மூலம் அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர். நாடெங்கும் இதற்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவரானவுடன் ட்ரம்ப் மேற்கொண்ட இந்த மனிதத் தன்மையற்ற போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.அவரின் நிற வெறி உணர்வை இச்செய்கை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.

1.குடியரசுத் தேர்தலில் தனக்கு எதிராக கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவழிப் பெண் போட்டியிட்டதும் ஒரு கட்டத்தில் அவரே வெற்றிபெறும் சூழ்நிலை உருவானதும் ட்ரம்புக்கு மிகுந்த ஆத்திரத்தை ஊட்டியிருக்கவேண்டும். அதன் காரணமாகவே இந்திய வம்சாவழியினர் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமக்கள் கமலா ஹாரிசுக்கு வாக்களித்தற்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக முதலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 104 பேர்களை விலங்கிட்டுத் திருப்பியனுப்பியதின் மூலம் தனது நிற வெறியை வெளிக்காட்டியுள்ளார்.

2.பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கப் போக்கு மிகுந்தவர் ட்ரம்ப் என்பதை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கர்களில் பெரும்பாலோர் ஆணாதிக்க மனநிலை கொண்டவர்கள். கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் குடியரசுத் தலைவரான கிளிண்டன் அவரின் மனைவியும் அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் புகழ்பெற்றவருமான திருமதி. ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்ட போது அவருக்கு சகல தகுதியும், திறமையும் இருந்தபோது அமெரிக்கர்கள் ஆணாதிக்கப் போக்குடன் அவருக்கு எதிராக வாக்களித்தார்கள். இப்போதும் அதுதான் நடைபெற்றிருக்கிறது.

இந்தியாவின் தலைமையமைச்சராக இந்திராகாந்தி அவர்களும், குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார்கள். தற்போது குடியரசுத் தலைவராக விளங்கும் திரௌபதி முர்மு மிகவும் பின்தங்கிய மலைவாழ் பழங்குடியைச் சேர்ந்தவர். வங்காள தேசத்தில் குடியரசுத் தலைவராக ஹசீனா பேகம் பதவி வகித்தார். இலங்கையின் தலைமையமைச்சராக திருமதி பண்டார நாயகாவும் குடியரசுத் தலைவராக சந்திரிகாவும் பதவி வகித்திருக்கிறார்கள். இதுபோலவே ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளில் பல பெண்கள் உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள்.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளில் பெண்கள் உயர் பதவியை வகிக்க எவ்விதத் தடையுமில்லை. ஆனால், சகல துறைகளிலும் மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்காவில் இன்னமும் நிற வெறிப் போக்கும், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியதாகும்.

இந்தியர்களுக்கு விலங்குப் பூட்டி திருப்பியனுப்பிய செயலை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டித்துக் குரல் எழுப்பியுள்ளன. ஆனால், இந்திய தலைமையமைச்சர் மோடி அவர்கள் டிரம்பின் அழைப்பினை ஏற்று அமெரிக்காவுக்கு விரைந்திருக்கிறார். ட்ரம்பின் அழைப்பை அவர் ஏற்க மறுத்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யும் துணிவு அவருக்கு இல்லை.

இந்தியாவின் முதலாவது தலைமையமைச்சராக விளங்கிய சவகர்லால் நேரு அவர்கள் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிப் போக்கினை மிகக் கடுமையாகக் கண்டித்தார். அதுமட்டுமல்ல, காமன்வெல்த் தலைமையமைச்சர் மாநாட்டில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் போக்கிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து, அந்த அமைப்பிலிருந்து தென்னாப்பிரிக்காவை நீக்கும்படிச் செய்தார். அதுமட்டுமல்ல, ஐ.நா. பேரவையிலும் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் போக்கிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார்.

சவகர்லால் நேருவிற்கு இருந்த அந்தத் துணிவு இன்றைய தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு சிறிதளவுகூட இல்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response