திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர்,கலைஞர் மு.கருணாநிதி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு…..
திருவள்ளுவர் திருநாளையொட்டி அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், விருதுகள் வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் சனவரி 15,2025 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமுவுக்கும், 2024 ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது எல்.கணேசனுக்கும், காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரசு முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவுக்கும்,மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும் பாரதிதாசன் விருது கவிஞர் பொன்.செல்வகணபதிக்கும் திருவிக விருது டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், கிஆபெ விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும், வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொரு விருதும் தலா ரூ.2 இலட்சம் பரிசும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதை விடுதலை இராசேந்திரனுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் விருதை விசிக மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமாருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருது தலா ரூ.5 இலட்சம் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி விருதை தமிழறிஞர் முத்து வாவாசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருது ரூ.10 இலட்சம் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்
இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலர் விஜயராஜ் குமார்,செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன்,செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.