மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு இயந்திர மோசடி மற்றும் குளறுபடி காரணமாகவே பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றதாக சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக 95 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், தற்போது எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பதாக உத்தவ் தாக்கரே கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அதில் எழுதப்பட்டிருப்பதாவது….
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 தொகுகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்த வெற்றி லாட்டரி வெற்றி பெற்றது போன்றது.
ஆனால் இது எப்படி சாத்தியம்? வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி எதுவும் செய்யலாம். 95 தொகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெருமளவில் வேறுபாடு காணப்படுகிறது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. வாக்கு எண்ணப்படும் போது வாக்கு இயந்திரங்கள் சார்ஜ் செய்யப்பட்டதும், வேறு சில நடவடிக்கைகளும் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க கூட்டணிக்கு இவ்வளவு அதிக வாக்குகள் எப்படிக் கிடைத்தன என்று நாடு முழுவதும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இவ்வாறு அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் 95 இடங்களில் போட்டியிட்ட உத்தவ் கட்சி, 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது முன்னெப்போதும் இந்தக் கட்சி கண்டிராத தோல்வி ஆகும். இந்த நிலையில் தேர்தலில் தோற்ற தனது கட்சி வேட்பாளர்களை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். அப்போது வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்குமாறு தேர்தலில் தோற்ற தனது கட்சி வேட்பாளர்களுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில்,
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் 26 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் முன்பு பா.ஜ.க கூட்டணியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. எனவே மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.