இவ்வளவு பெரிய அழிவுக்குப் பின்னும் தேசியப் பேரிடராக அறிவிக்காத மோடி – கேரள மக்கள் கோபம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஜூலை 30 ஆம் தேதியன்ரு அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. வீடுகள் இருந்த பகுதிகளில் இப்போது காட்டாற்று வௌ்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 350 ஐ தாண்டி விட்டது. இன்னும் 300 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இராணுவம், பிராந்திய இராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மாயமானவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தப் பகுதி முழுவதும் இரண்டு அடிக்கு மேல் சகதி நிறைந்து காணப்படுவதால் மீட்புப் படையினர் மிகவும் சிரமத்துடன்தான் உடல்களைத் தேடி வருகின்றனர். சகதிக்குள் உடல்கள் புதைந்து கிடக்கிறதா என்பதைக் கண்டறிய தெர்மல் ஸ்கேனர், ரேடார் உள்பட நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசுத் தரப்பில் இதுவரை 210 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் 84, பெண் 93, குழந்தைகள் 28. 133 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. மீட்கப்பட்டதில் 74 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்கள் மேப்பாடி பகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வயநாடு மாவட்டம் முழுவதும் உள்ள 91 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேப்படி பகுதியில் மட்டும் 17 நிவாரண முகாம்களில் 2597 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்டவர்களில் தங்களின் குடும்ப உறவுகள் இருக்கிறார்களா என்று முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் பலர் தேடி அலையும் காட்சி காண்போரைக் கண் கலங்க வைக்கிறது.

இத்தகைய வரலாறு காணாத பேரழிவு நடந்துள்ள போதிலும், இதனை தேசியப் பேரிடராக ஒன்றிய பாஜக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

இது குறித்து, கேரள மாநில வருவாய்த் துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், ‘‘வயநாட்டில் ஏற்பட்டது ஒரு பேரழிவாகும். ஏராளமானோர் வீடுகளையும், உற்றார், உறவினர்களையும் இழந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒரு பேரழிவு நம் நாட்டில் எங்குமே நடந்ததில்லை. எனவே இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேரளா பலமுறை வலியுறுத்தியுள்ளது. முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி உள்பட பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எந்தப்பதிலும் தெரிவிக்கவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது’’

என கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக கேரள அரசு அறிவித்துள்ளது. மேப்பாடி பஞ்சாயத்திலுள்ள கோட்டப்படி, வெள்ளார்மலை ஆகிய கிராமங்களும், வைத்திரி தாலுகாவிலுள்ள திருக்கைகப்பற்றா என்ற கிராமமும் ஜூலை 30 ஆம் தேதி முதல் பேரிடர் பாதித்த பகுதிகள் என்று கேரள அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மோடி அரசு இதை தேசியப் பேரிடராக அறிவிக்காததால் கேரள மக்கள் மோடி அரசு மீது கோபம் கொண்டுள்ளனர்.

Leave a Response