சந்திரபாபுவுக்கு வந்த திடீர் சோதனை – பாஜக சூழ்ச்சியா?

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில்,ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக் கட்சி இளைஞரணித் தலைவர் ரஷீத் நேற்று முன்தினம் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அவருடைய குடும்பத்தினரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன்…

தெலுங்கு தேசம் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 45 நாள் ஆட்சியில் 36 படுகொலைகள், 300க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள், 560 இடங்களில் தனியாரின் சொத்துகள் சேதம் உள்ளிட்டவை நடந்துள்ளன. 490 அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு ஆதரவாளர்கள் மீது வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.

எனவே ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி வரும் 24 ஆம் தேதி டெல்லியில் ஒய்.எஸ்.ஆர். கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் தர்ணா போராட்டம் நடத்தப்படும். ஆந்திர மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் குறைந்தது ஆறு மாத காலம் அவர்கள் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டுப் பின்பு விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகள் வழக்கம்.

ஆனால், இப்போது சந்திரபாபு ஆட்சிப் பொறுப்பேற்று ஐம்பது நாட்களுக்குள் அவருடைய ஆட்சியையே கலைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பான போராட்டத்தை டெல்லியில் நடத்தி பிரதமர் மோடியிடம் புகார் செய்வேன் என்று சொல்லியிருக்கிறார் ஜெகன்மோகன்.

இந்தப் போராட்டமே பாஜக சொல்லித்தான் நடக்கிறதா?,இது சந்திரபாபுவை அடக்கி வைக்க பிரதமர் மோடி கடைபிடிக்கும் உத்தியா? என்கிற கேள்விகள் எழுகின்றன.அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response