மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசு ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், கூச்பெஹாரில் உள்ள மதன் மோகன் கோயிலுக்குச் சென்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழிபாடு செய்தார். அப்போது அந்தக் கோயிலுக்கு அருகே வசிக்கும் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் நாகேந்திர ராய் என்ற ஆனந்த் மகாராஜ் மம்தாவை நேரில் சந்தித்துப் பேசினார்.இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கூச்பெஹார் தொகுதியை திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றி உள்ளது.
அதற்குக் காரணம், இந்தத் தொகுதியில் முக்கியமான ராஜ்வன்ஷி சமூகத்தினரின் வாக்குகள் திரிணாமுல் காங்கிரசுக் கட்சிக்குக் கணிசமாகக் கிடைத்திருப்பதுதான் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், ராஜ்வன்ஷி சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான ஆனந்த் மகாராஜ் மம்தாவைச் சந்தித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுமட்டுமின்றி,இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியில் இணைய உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த உறுதியான எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இருந்தாலும், இந்தச் செய்தியால் பாஜக அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தனிப் பெரும்பான்மை கிடைக்காமால் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக.
இந்நிலையில் இருக்கும் 240 பேரில் மூன்று பேரை இழந்தால் மேலும் பலவீனமாகும் என்பதால் பாஜகவினரிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே மக்களவைத் தலைவர் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் அதைச் சரி செய்யும் வேலைகள் நடக்கின்றன.
இந்நிலையில் புதிய தலையிடியாக இச்சிக்கல் உருவாகியிருக்கிறது.இதனால் பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.