அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. அம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https: muthamizhmuruganmaanadu 2024.com என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, பதிவுகள் நடந்து வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அதனடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுகளின்படி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க மேலும் பத்துநாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதற்கு ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.