வாரிசு அரசியல் என்று விமர்சித்த மோடி அமைச்சரவையில் உள்ள வாரிசுகள் பட்டியல்

தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியா கூட்டணியைப் பற்றிய விமர்சனங்களில் வாரிசு அரசியல் என்பதை மேடைக்கு மேடை சொல்லிக்கொண்டிருந்தார் பிரதமர் மோடி.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், தேசிய சனநாயகக் கூட்டணியில் பதவி பெற்றுள்ள வாரிசுகளின் பெயர்களைப் பகிர்ந்துள்ளார்.

அதோடு, “கட்சியில் தலைமுறைகளைக் கடந்து போராட்டம், சேவை, தியாகம் செய்தவர்களை வாரிசு அரசியல் எனச் சொல்பவர்கள், அதிகாரத்தை வாரிசுகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இராகுல் காந்தி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகள்….

எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்.
ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன்.
ராம்நாத் தாக்கூர் – பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன்.
ராவ் இந்தர்ஜித் சிங் – அரியாணா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங்கின் மகன்.
ரவ்னீத் சிங் பிட்டு – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்.
ஜோதிராதித்ய சிந்தியா – முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்.
சிராக் பாஸ்வான் – முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன்.
ராம் மோகன் நாயுடு – முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடுவின் மகன்.
பியூஷ். கோயல் – முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்.
தர்மேந்திர பிரதான் – முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன்.
கிரண் ரிஜிஜு – அருணாச்சல்பிரதேசத்தின் முன்னாள் சபாநாயகர் ரிஞ்சின் காருவின் மகன்.
ஜே.பி. நட்டா – மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெய்ஸ்ரீ பானர்ஜியின் மருமகன்.
ஜிதின் பிரசாதா – உத்தரப் பிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாதா மகன்.
கிர்த்தி வர்தன் சிங் – உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங்கின் மகன்.
அனுப்ரியா படேல் -பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் நிறுவனர் சோனேலால் படேலின் மகள்.
ரக்‌ஷா கட்சே – மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள்.
கமலேஷ் பாஸ்வான் – உத்தரப் பிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பாஸ்வானின் மகன் இவர்.
சாந்தனு தாக்குர் – மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாகூரின் மகன்.
வீரேந்திர குமார் காதிக் – மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் கௌரிசங்கர் ஷெஜ்வாரின் மைத்துனர்.
அன்னபூர்ணா தேவி – பிகார் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் பிரசாத் யாதவின் மனைவி.

இதனிடையே, “புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் முகமும் இல்லை. இது உலக அளவில் நாட்டின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் எனக் கூறக்கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியைக் கொண்டுள்ள ஒரு பிரிவினரை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைப்பது நாட்டின் மரியாதையைப் பாதிக்கும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரசு மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Response