குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3 ஆவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில், ஒன்றிய அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 எம்.பி.க்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்குவது ஏற்புடையது அல்ல என அக்கட்சி எம்.பி. ஸ்ரீரங் பார்னே அதிருப்தி தெரிவித்துள்ளார். 7 எம்.பி.க்கள் வைத்துள்ள தங்கள் கட்சிக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஷிண்டே கட்சி தெரிவித்துள்ளது.
2 எம்.பி.க்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு ஷிண்டே சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே ஒரு எம்.பி.யாக உள்ள ஜிதன் ராம் மஞ்சி கேபினட் அமைச்சராக பதவியேற்றதற்கும் ஷிண்டே சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது.
ஏற்கெனவே அஜித் பவார் கட்சி நெருக்கடியைத் தொடர்ந்து ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி மட்டுமின்றி இலாகா ஒதுக்கீடு தொடர்பாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.
ஒன்றிய அமைச்சர்கள் பதவியேற்று 21 மணி நேரங்களைக் கடந்த பிறகும் இதுவரை இலாகா ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
இலாகா ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜக கட்சி ஆகியனவற்றுக்குள் கடும் கருத்துவேறுபாடு நிலவி வருவதால் இலாகா ஒதுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
பதவியேற்று 21 மணி நேரம் கடந்தும் அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்காதது ஏன்? என்று காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் நிதித்துறையை கேட்டு குறிப்பிட்ட அமைச்சர்கள் நெருக்கடி தருகிறார்களா? என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி கேட்டுள்ளார்.
இதேகேள்வி ஒன்றியம் முழுவதும் எழுந்து வருகிறது.