திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுங்கள் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்

06.04.2024 காரிக்கிழமை (சனி) அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை தஞ்சை பெசன்ட் அரங்கில் தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன், துணைத் தலைவர்கள் திருமதி. த.பானுமதி, சா.இராமன், சி.முருகேசன், தி.ம.பழனியாண்டி, பொருளாளர் ம.உதயகுமார், பொதுச் செயலாளர்கள் ந.மு.தமிழ்மணி, பசுமலை மற்றும் சாமி.கரிகாலன், இர.சிவப்பிரியன், இரா.முரளிதரன்,வெ.ந.கணேசன்,பி.தட்சிணாமூர்த்தி, கா.அமுதன்,வை.இரா.பாலசுப்பிரமணியன்,பெ.இராமசுப்பு,க.ஆத்மநாதன்,அருணாசுந்தரராசன்,சதா.முத்துக்கிருஷ்ணன்,சி.செந்தில்நாதன் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒரே மனதுடன் நிறைவேற்றப்பட்டது.

01.04.2024ஆம் ஆண்டு ஏப்ரல்19ஆம் நாள் தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாசிச பா.ச.க. வெற்றி பெற்றுவிடுமானால், எதிர்காலத்தில் சனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது. பாசிச சர்வாதிகார இந்துத்துவ ஆட்சி நிலைநிறுத்தப்படும். மதச் சிறுபான்மையினர் மற்றுமுள்ள மொழிச் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். சமற்கிருத மொழியும் பண்பாடும் திணிக்கப்படும். மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டுத் தூக்கி எறியப்படும்.

ஒட்டுமொத்தமாக நாட்டின் சனநாயகத்திற்கு நேரிடக்கூடிய பேரபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், பா.ச.க. கூட்டணி அடியோடு முறியடிக்கப்பட வேண்டும்.

அதற்குரிய வலிமை தற்போதைய சூழ்நிலையில் இந்தியா கூட்டணியைத் தவிர, வேறெந்த அணிக்கும் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும். எனவே, அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமாறு மக்களுக்குத் தமிழர் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Response