உதயநிதி தலைக்கு பத்து கோடி – சாமியார் அறிவிப்பு மக்கள் எதிர்ப்பு

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது iஇந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் பாஜக ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் , உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சனாதனக் கொள்கைக்கு எதிராகப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து அதிர வைத்துள்ளார்.அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அந்தப் புகைப்படத்தை தீ வைத்து எரித்தார்.

இவர், சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடையப் போவதாக விளம்பரம் செய்தவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக இராமர் குறித்துப் பேசிய கலைஞர் மு.கருணாநிதியின் தலையைச் சீவி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விசுவ இந்து பரிஷத் தலைவர் பேசியது சர்ச்சையானது.

இதுதொடர்பாக கலைஞரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, எனது தலையை நானே சீவ முடியவில்லை என தனக்கு வழுக்கை விழுந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பதில் தந்தார் கலைஞர். அதே வகையிலான சர்ச்சை அவருடைய பேரன் உதயநிதிக்கும் வந்துள்ளது.

சாமியாரின் இந்தக் கருத்துக்குப் பெரும்பான்மை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதேநேரம் சமூக வலைதளங்களில் உதயநிதிக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது.இந்தியா உதயநிதி பக்கம் எனும் பொருளில் குறிச்சொல் வைத்து பல்லாயிரக்கணக்கானோர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Response