ஆளுநர் சாடியது மோடியையா? – அமைச்சர் ஐயம்

சென்னையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது…..

தமிழ்நாடு ஆளுநர் அண்மைக்காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். இதை அவருடைய அண்மைக்கால பேச்சுகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் அன்னைத் தமிழ்நாட்டை, இது தமிழ்நாடு அல்ல, தமிழகம் என்று சொல்லாடலைப் பயன்படுத்த முயற்சித்தார். அது நாடு தழுவிய அளவு கண்டனத்துக்குள்ளானது. அதேபோல் எழுவர் விடுதலையிலும் அவரது நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் இரு முறை விமர்சனத்துக்கு உள்ளானது. திராவிடம் என்ற சொல்லே கூட தனக்கு ஒவ்வாமை என சொல்லும் அளவில்தான் அவருடைய கடந்தகால நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டி, அங்கு அவருடைய அரசியலை ஆளுநர் பேசியிருக்கிறார். குறிப்பாக, தமிழகத்தில் கல்விச் சூழ்நிலை சரியில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதைப் போலவும் பேசியிருக்கிறார். அதேபோல், தொழில் முதலீடுகள் ஒரு நாட்டுக்கு வருவது என்பது, ஏதோ தொழில் முதலீட்டு ஈர்ப்புப் பயணங்கள் மூலமாகவோ அல்லது தொழில் முதலீடு குறித்து பேசுவதால் மட்டுமே வந்துவிடாது என்று கூறியிருக்கிறார்.

அண்மையில், தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட பயணத்தைச் சுட்டிக்காட்டி மறைமுகமாக ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க துணை வேந்தர் மாநாட்டை தன்னுடைய அரசியலுக்காக அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஆளுநர் இவ்வாறு செய்வதற்கு, ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய சில பிரச்சினைகளுக்கு ஆளுநர் தெரிவித்த கருத்துகள் மாறானவகையில் வந்திருந்தது. அதை திசைத்திருப்பவே ஆளுநர் இவ்வாறு செய்துள்ளார்.

சிதம்பரம் தீட்சிதர் விவகாரத்தில், இளவயது திருமணம் கிடையாது என்று கருத்து தெரிவித்தார். சமூக நலத்துறை தேவையில்லாமல் வழக்குப் பதிவு செய்து அவர்களை கொடுமைப்படுத்தியதாக ஆளுநர் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஆனால், இத்தகைய திருமணங்கள் நடந்திருப்பதை ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. எனவே, ஏற்கெனவே தான் கூறிய கருத்துகள் உண்மைக்கு மாறானது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நிலையில், அவற்றில் இருந்து திசைதிருப்புவதற்காக ஆளுநர் இத்தகைய அரசியல் கருத்துகளை சொல்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.

ஆளுநர் தமிழகத்தின் கல்வி சூழ்நிலை சரியில்லை என்பதுபோல் கூறியிருக்கிறார். ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட தரவரிசையில்கூட, இந்தியாவில் இருக்கக்கூடிய 100 பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில், அதில் 22 தமிழகத்தில் இருப்பவை. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 30 தமிழகத்தைச் சேர்ந்தவை. இத்தனை சிறப்புகள் கொண்ட தரவரிசையை வெளியிட்டிருக்கக்கூடிய அதேநேரத்தில், ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார். நிதி ஆயோக் தரவரிசை வெளியிடப்பட்டபோதும், தமிழகம் சிறப்பான இடங்களைப் பிடித்திருந்தது.

Gross Enrollment Ratio-வைப் பொறுத்தமட்டில், 46.9 சதவீதம் நம்முடைய தமிழகத்தில், மொத்த மாணவர்கள் பதிவு 33 லட்சத்து 36 ஆயிரத்து 439 பேர். அதற்கு தமிழகத்தின் கல்வி கட்டமைப்பும், கல்வி சூழ்நிலையும் சிறப்பாக அமைந்திருப்பதே காரணம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த 100 பொறியியல் பல்கலைக்கழகங்களில் 18-வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகம் கல்விக் கட்டமைப்பில் மிக சிறந்த இடத்தில் உள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் வேந்தராக இருக்கும் ஆளுநர் இந்த தரவுகளை எல்லாம் மறந்துவிட்டு எப்படி இவ்வாறு பேசுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. பொருளாதார ரீதியில், இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழகம். நிதி ஆயோக்கும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் ஆளுநரின் கருத்து அந்த கூற்றுக்கே மாறான கருத்தை கூறுகிறார்.

அதுபோல், வெளிநாடுகளுக்கு சென்று வந்தால், முதலீடுகள் வந்துவிடுமா, என்றொரு கேள்வியைக் கேட்கிறார். 2022 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் வரை, 108 நிறுவனங்கள், 1 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து, அதில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதை ஆளுநருக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். 2021-2022 நிதியாண்டில் தமிழகத்தில், 4 லட்சத்து 79 ஆயிரத்து 213 நிறுவனங்கள், 36 இலட்சத்து 63 ஆயிரத்து 910 பணியாளர்களோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை 2022-2023 நிதியாண்டில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 296 ஆக உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு 47 லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பயணங்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் நான் கேட்க விரும்புவது, இதுபோன்ற பயணங்களை ஏதோ தமிழக முதல்வர் மட்டுமா மேற்கொண்டிருக்கிறார்? பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தார். 2011-ல் சீனாவுக்கு பயணம் செய்தார், சீனாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அங்கிருக்கக் கூடிய சீன தொழிலதிபர்களுடன் அவர் உரையாடினார்.

சீனா மட்டுமல்ல, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான்,கொரியா, தைவான், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து இங்கு வந்து தொழில் தொடங்க அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். பிரதமர் அவ்வாறு அங்கு சென்று வந்திருக்கும்போது, இங்கு உகந்த சூழல் இல்லை என்று அர்த்தமா?

அல்லது பிரதமர் சென்று பார்ப்பது சரி என்று ஆளுநர் கூறினால், இதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதைவிட, பாஜக இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். எங்களை நோக்கி ஆளுநர் வீசியிருக்கும் அம்பை, பிரதமரை நோக்கி ஆளுநர் எய்திருப்பதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். எனவே, குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடி மேற்கொண்ட இதுபோன்ற பயணங்களைத்தான் ஆளுநர் இப்போது சுட்டுகாட்டியிருக்கிறோரோ என்ற சந்தேகம் வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response