விஜயகாந்த் திமுகவோடுதான் கூட்டணி வைப்பார்- சீமான் தகவல்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 20 நாட்களுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அந்தவகையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஓடை பகுதியில் மக்களைச் சந்தித்தபோது, ஓடை பகுதியிலுள்ள சாலையை சீரமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து 29.12.15 காலை சாலை அமைக்கும் பணியை நாம் தமிழர் கட்சியினர் தொடங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது,

மண்ணின் பூர்வீகக்குடி மக்களை, ஆதித்தமிழர்களை சென்னையில் நகர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி செம்மஞ்சேரி, கல்லுக்குட்டை, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் தள்ளியிருக்கிறார்கள் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும். அதில் ஒரு பகுதிதான் இந்த ஓடை பகுதி. இங்கு கழிவறைகள், சாலை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. திறந்தவெளியைத்தான் பெண்கள் உட்பட எல்லோரும் இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பயன்படுத்துகிறார்கள். அதனால், இங்கு கழிவறைகள் அமைத்துத்தர இருக்கிறோம். இப்போது சாலைகளை அமைக்கிற பணிகளைச் செய்து வருகிறோம். அரசானது, வெறும் இரண்டாயிரம் வீடுகளை மட்டுமே கட்டிவிட்டு அதனைக்காட்டி இரண்டு இலட்சம் மக்களை அப்புறப்படுத்தியிருக்கிறது. தங்கள் வாழ்கிற இடங்களிலே குடியிருப்புகளை அமைத்துத் தரக்கோரிதான் மக்கள் கேட்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் வாழ்வாதாரம் இங்குதானிருக்கிறது. அதனால், கழிவறைகள், சாலை, மின்விளக்கு போன்ற அத்திவாசியத் தேவைகளை மக்களுக்கு அமைத்துத் தரவேண்டியிருக்கிறது. அதில் எங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு நாங்கள் செய்கிறோம்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு சீமான் அளித்த பதில்களும் பின்வருமாறு:

விஜயகாந்தை எல்லாக்கட்சிகளும் கூட்டணிக்கு வருமாறு அழைத்து முக்கியத்துவம் கொடுப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விஜயகாந்தைக் கூட்டணிக்கு அழைப்பவர்கள், விஜயகாந்தைவிட தாங்கள் பலவீனமாக இருப்பதாகக் கருதுகிறார்கள். அதனால்தான், கூட்டணிக்கு அழைக்கிறார்கள். நாங்களும் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். ஆனால், யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. ஏனென்றால், எங்களிடம் ஒரு தத்துவம் இருக்கிறது; நோக்கம் இருக்கிறது. ஆனால், அப்படி, ஒரு தத்துவமும், நோக்கமும் இருந்தால் விஜயகாந்தே எந்தக்கூட்டணி என முடிவெடுத்திருப்பார். அது எதுவும் இல்லாததால் முடிவெடுக்கத் திணறுகிறார்.

இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிக இருக்குமா?

இப்போது இருக்கிறதோ இல்லையோ திமுகவை அண்ணா தொடங்குகிறபோதாவது அதற்கு ஒரு கொள்கை இருந்தது. இன்றைக்கு தாய்க்கழகமான திமுகவைப் போலவே, அதிமுகவும், மதிமுகவும் கொள்கையற்று இருக்கிறது. இருப்பினும், இவர்கள் அண்ணாவின் கொள்கையையாவது அறிந்திருந்தார்கள். ஆனால், தேமுதிகவிற்கு ஒரு கொள்கையோ, தத்துவமோ எதுவுமில்லாது இருக்கிறது. அது ஒரு மோசமானத் திராவிடக் கட்சி. ‘கொள்கையற்ற அரசியல் பாவம்’ என்கிறார் காந்தி. அப்படி, தத்துவம், கொள்கை எதுவுமற்ற கட்சிதான் தேமுதிக. ஒருவேளை, விஜயகாந்தை முதல்வராக்கினால் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியே பரவாயில்லை என்ற நிலைக்கு அவர் நம்மைத் தள்ளிவிடுவார்.

161ஆவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறாரே, அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழக அரசானது, 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதுதான் எங்களுக்கு இருக்கிற கடைசி வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். அதனைத்தான் நாங்கள் எல்லோரும் வலியுறுத்துகிறோம். வருகிற 31ஆம் தேதி சிறையிலிருக்கும் எமது தம்பிகளை சந்திக்க இருக்கிறேன். சந்தித்தபிறகு, மீண்டும் ஒருமுறை தமிழக அரசுக்கு இதுகுறித்து கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுப்போம். ஏழு தமிழர்களின் விடுதலைக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, இதில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

‘திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும்’ என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறாரே அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது தன்னலம் சார்ந்த முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத அரசியல். 9 ஆண்டுகள் காங்கிரசோடு மத்திய அமைச்சரவையில் இருந்துவிட்டு, ‘ஈழத்தமிழருக்கு துரோகம் செய்துவிட்டார்கள்’ எனக்கூறி கடைசிகாலத்தில் காங்கிரஸ் கூட்டணியைவிட்டு திமுக விலகியது ஒரு அப்பட்டமான நாடகம். எதற்காக காங்கிரஸ் கூட்டணியைவிட்டு திமுக விலகியது? இப்போது எதற்காக கூட்டணி சேரத் துடிக்கிறது? விலகிய நோக்கம் நிறைவேறிவிட்டதா? என்று கேட்டால் இவர்களிடத்தில் பதிலிருக்காது. இப்படி, ‘மக்கள் அரசியல் தெளிவற்ற அடிமுட்டாள்கள்’ என நினைத்துதான் இவர்கள் அரைநூற்றாண்டுகளாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை ஏதாவதொரு தேசியக் கட்சியோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்றாக காங்கிரஸ் வந்தால் அப்போது இது சாதகமாக இருக்கும் என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள். அதனால், திமுகவின் இந்த முடிவு எமக்கு வியப்பளிக்கவில்லை. திமுக, தேமுதிக, காங்கிரஸ் என்று கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். விஜயகாந்துக்கு அவரோடு இருப்பவர்களுக்கும் எந்த தத்துவ நோக்கமும் இல்லாததால் யாரோடாவது கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் கருதுகிறார்கள். அதனால், எங்களைப் போன்று தனித்து நின்று தேர்தலைச் சந்திக்கிற துணிவு விஜயகாந்துக்குக் கிடையாது. எனவே, விஜயகாந்த் திமுகவோடுதான் போவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response