யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது.

யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன் சனசமூகநிலைய முன்றலில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை.சரவணன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா.சண்முகலிங்கன் கலந்து கொண்டிருந்தார்.

திருமதி ரேணுகா அன்ரன்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.

தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகிவந்துள்ளன. இந்நிலையில், மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளது.

Leave a Response