தமிழக ஆளுநர் விரைவில் தூக்கியெறியப்படுவார் – ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

தமிழகம் முழுவதும் “நீட்” தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,

ஈரோட்டில் நடந்த பரப்புரைப் பயணக் கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேரன் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது…..

என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, மேடையில் மணவிழாவினை நடத்திக்கொண்ட மணமக்கள் இரா.நேரு – அறிவுச்செல்வி ஆகியோர் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

இங்கே மணமகள் வீட்டைச் சார்ந்த பொன்முகிலன் குடும்பத்தினர் இல்லத் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
பொன்முகிலன்- செல்வி ஆகியோரின் திருமணத்தை நம்முடைய ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள்தான் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு அவருடைய மகளின் மணவிழாவினையும் தமிழர் தலைவர்தான் நடத்தி வைத்திருக்கிறார்கள்.
கண்டிப்பாக இந்த மணமக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் தமிழர் தலைவர் அவர்கள்தான் மணவிழாவினை நடத்தி வைப்பார், நடத்தி வைக்க வேண்டும்.

மணவிழாவினை நடத்தி வைக்கின்றார் என்பதை விட, அவர் நூறாண்டுகளுக்கு மேலாக வாழவேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

ஏனென்றால், அவருடைய சேவை என்பது, அதுவும் மோடியின் காலத்தில் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
கடந்த 3 ஆம் தேதியன்று அவருடைய சுற்றுப் பயணத்தைத் தொடங்கி, வருகின்ற 25 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை சென்னையில் நிறைவு செய்யவிருக்கின்றார்கள்.

முதலில் நான் இந்தச் சுற்றுப்பயண விவரத்தை ‘விடுதலை’ நாளிதழில் பார்த்தவுடன், எனக்கு முதலில் வருத்தம் என்று சொல்வதைவிட, ஆதங்கமாக இருந்தது.

தமிழர் தலைவர் எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு, வெயிலையும் பொருட்படுத்தாமல், நடுவில் பெய்கின்ற மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றாரே, ஒரு நாளைக்கு இரண்டு கூட்டங்களில் பேசுகின்றாரே என்று நினைத்து, தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டு, ”தயவு செய்து உங்களுடைய உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளவேண்டும்; இவ்வளவு கடுமையான சுற்றுப்பயணம் வேண்டாம்” என்று சொன்னேன்.

”இல்லை, இல்லை; செய்யவேண்டிய காலம் இது; நான் செய்துதான் ஆகவேண்டும்” என்றும் சொன்னார்கள்.
இவ்வளவுதான் உங்களுக்குத் தெரியும்; கூட்டம் என்பது எப்படியெல்லாம் நடக்கின்றது என்றும் தெரியும்.

ஆனால், இவ்வளவு சிரமப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கி, சென்னையில் சுற்றுப்பயணத்தை முடிக்கவிருக்கின்றார் – தமிழ்நாடு முழுவதும் எதற்காக இந்த சூறாவளிப் பயணம் என்று யோசிக்கும்பொழுது, கண்டிப்பாக இந்த சூறாவளிப் பயணம் என்பது இந்தக் காலகட்டத்தில் ஒரு முக்கியமான அங்கமாகும். தமிழ்நாட்டிற்கு இது தேவையான ஒன்றாகும்.

இந்தியாவிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான். ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டிலேயே சில நச்சு சக்திகள், விஷம் பொருந்திய பாம்புகள் போல், இன்றைக்குத் தமிழ்நாட்டில் நுழைந்து கொண்டிருக்கின்றார்கள்.கேட்டால், திருவண்ணாமலைக்கு அருகிலிருந்து வருகிறேன் என்று சொல்கின்றார்கள்.
அந்த விஷப் பாம்புகளை நசுக்கியாகவேண்டும்; ஏனென்றால், நூறாண்டுகாலமாக தமிழர்களுக்கு என்று ஓர் அரசியல் உண்டு; ஒரு பாரம்பரியம் உண்டு; ஒரு கலாச்சாரம் உண்டு; ஒரு கண்ணியம் உண்டு.
எந்தத் திரிபுவாதத்தையும் நாம் எதிர்த்தவர்கள் என்பதில் தமிழர்கள் பெருமை கொள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது.

ஏனென்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால், 1920-1921 ஆம் ஆண்டில்கூட, மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று சொன்னால், சமஸ்கிருதம் தெரிந்தி ருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆகவே, அப்பொழுதே மேல்ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. நீதிக்கட்சி ஆட்சி தான் அந்த நிலையைப் போக்கியது.

அப்பொழுதிருந்தே அது தலை நீட்டும்பொழுதெல்லாம், அதனை ஒட்ட நறுக்கி, அவர்களை நாம் துரத்திக் கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நாம் அதிக அளவிலே அவர்களைத் துரத்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் அவர்களைப் பொறுத்தவரையில், முதன்முதலில் அவர் மேடை ஏறியது அவருடைய 10 ஆவது வயதில். இன்றைக்குக் கிட்டத்தட்ட 90 வயதை நெருங்கியிருக்கின்றார். இதுவரையில் அவர் எத்தனை ஆயிரம் மேடைகளில் பேசியிருப்பார் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்னொன்றையும் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், இன்றைக்குப் பெரியார் அவர்களுடைய வாரிசு என்பது மட்டுமல்ல, பெரியாருடைய குரலாக இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது நம்முடைய தமிழர் தலைவர்தான் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

14, 15 ஆவது வயதிலேயே கையெழுத்துப் பிரதியில் பத்திரிகையைத் தொடங்கியவர் தமிழர் தலைவர். இன்னொருவரும் இருக்கின்றார், அவர்தான் டாக்டர் கலைஞர் அவர்கள்.

ஆக, கையெழுத்துப் பிரதிகளின்மூலம் கொள் கைகளைப் பரப்பக்கூடியவர்கள் – 15 வயதி லேயே நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தொடங்கிவிட்டார் என்று சொன்னால், அவருடைய இளமைக்காலத்திலேயே இந்தக் கொள்கையில் ஒன்றிப் போயிருக்கிறார் என்பது மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இந்தக் கொள்கையைப் பரப்பவேண்டும் என்ற ஆவலில்தான் அவர் அதை செய்திருக்கின்றார்.

அவரை நான் ஓர் ‘அதிசய’ மனிதராகப் பார்க்கின்றேன். 46 நிறுவனங்களை அவர் நிர்வகித்து வருகின்றார்; பராமரித்து வருகின்றார். அதை நல்ல முறையில் நடத்திக் கொண்டு வருகின்றார்.

அதுமட்டுமல்ல, அத்தனை நிறுவனங்களின் மூலமாக கீழ்த்தட்டு மக்களுக்கு உதவியாக இருக் கின்ற வகையில் செயலாற்றுகின்றார் என்று சொல்லும் பொழுது, எவ்வளவு பெரிய மகத்தான சாதனை அது!

பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவது, ‘விடுதலை’ நாளிதழ் பணிகளை மேற்கொள்வது, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி வருவது – தமிழனுக்கு ஒரு சிறு அவமானம் என்றால், முதலில் குரலை உயர்த்துபவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான்.

இன்றைக்கு அவரோடு இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் நிச்சயம் பெருமையடைகின்றேன்.
இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் இங்கு உரையாற்ற வந்தேன் என்பதை விட, அவருடைய உரையை கேட்கத்தான் வந்தேன்.

நீட் தேர்வைப்பற்றியெல்லாம் எனக்கு முன்பாக உரையாற்றியவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார்கள்.
நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நீட் தேர்வு என்பது எவ்வளவு அபாயகரமானது; அதிலும் நம்மைப் போன்ற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி என்பதை ஒரு சிறு புள்ளிவிவரம், தமிழர் தலைவர் அவர்கள் இங்கே வெளியிட்ட புத்தகத்தில் இருக்கிறது.

மருத்துவக் கல்லூரியில் இருக்கின்ற இடங்கள் 3081. அந்த இடங்களில் 3033 இடங்கள், நீட் தேர்வில் தேறியவர்கள். தேறியவர்கள் என்று சொன்னால், அதற்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டு தேறியவர்கள். பயிற்சி எடுத்துக்கொண்டு தேறியவர்கள் என்று சொன் னால், சும்மா கிடையாது; கிட்டத்தட்ட 4, 5 லட்சம் ரூபாய் செலவு செய்து, பயிற்சி வகுப்பில் படித்து, இடங்களைப் பெற்றவர்கள் 3033 ஆகும்.

ஆனால், வசதியில்லாதவர்கள், பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைத்திருக்கிறது என்று சொன்னால், வெறும் 48 இடங்களே! ஒரு சதவிகிதம்கூட கிடையாது.
ஆக, நீட் தேர்வு எப்படி நம்முடைய மாணவர்களை பாதிக்கிறது என்பதை நீங்கள் இதிலிருந்தே புரிந்து கொள்ளவேண்டும்.

ஆகவே, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும்; இது தமிழ்நாட்டிற்குப் பொருந் தாது என்று குரல் கொடுத்து, தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒன்றிரண்டு எடுபிடிகளைத் தவிர, மற்ற அத்தனைக் கட்சியினரும் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பவர் யார் என்று சொன்னால், நாகலாந்திலிருந்து வந்தவர். அங்கே அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்றால், தீவிர வாதிகளோடு பேச்சுவார்த்தை; பேச்சுவார்த்தை என்று சொன்னாலும், அது ஒரு அண்டர்ஸ்டான்டிங்.

அதைச் செய்தவர் இங்கே ஆளுநராக வந்து, அனைத்துக் கட்சியினரும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், அவருடைய கடமை – அவருடைய வேலை என்னவென்று சொன்னால், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு, ஒன்றிய அரசுக்கு அனுப்பவேண்டும்.

ஆனால், ஆளுநர் அவர்கள் அதனைச் செய்யவில்லை. முதலமைச்சர் அவர்களும் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து, இதையே வலியுறுத்தியிருக்கின்றார். அப்பொழுதும் ஆளுநர் செவிசாய்க்கவில்லை.

மீண்டும் சட்டப்பேரவையில் அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி, மீண்டும் அதை அனுப்பவேண்டும் என்று சொன்னால், அதையும் ஆளுநர் அவர்கள் தன்னுடைய நாற்காலியின்மேல் போட்டு அமர்ந்து கொண்டிருக்கின்றார் என்றால், இது என்ன நியாயம்?

ஆளுநராக இருக்கின்றவர் ஒரு பெரிய மனிதராக இருக்கவேண்டும்; ஒன்றிய அரசுக்கும் – மாநில அரசுக்கும் இருக்கின்ற உறவை நல்வழிப்படுத்தவேண்டும்; அதுதான் ஆளுநருக்கு அழகாகும்; அதுதான் ஆளுநருடைய கடமையும் ஆகும்.

ஆனால், இங்கே இருக்கின்ற மக்களுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவேன் என்று சொன்னால், அவரைத் தூக்கி எறிகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே, இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கின்றபொழுது, நாம் கண்டிப்பாக இதனை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மட்டும் போதாது; போராடவேண்டிய அவசியம் வந்துவிட்டது என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

போராட்டம் என்றால், அதில் வன்முறை கிடையாது. என்னை விட உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அத்தனை போராட்டங்களும் வன்முறை இல்லாத போராட்டங்கள்.
தொடக்கத்தில் தாளமுத்து, நடராசன் காலத்தில் இருந்து பார்த்தீர்களேயானால், தொண்டர்கள் உயிரைப் பலி கொடுப்பார்களே தவிர, அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்.
கத்தியை வைத்துக் கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னாரே, அது குத்துவதற்காக அல்ல; வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார். சில பேருக்குக் கத்தி என்று சொன்னாலே, காய்ச்சல் வரும்; அதற்காகத்தான் பெரியார் அப்படி சொன்னார்.

ஆக, இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரையில், நாம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். இப் பொழுது ஒன்றிய ஆட்சியில் இருக்கின்ற மோடி – அவருடைய எடுபிடி அமித்ஷா. இன்றைக்கு அவர்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இணைப்பு மொழியாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று.
இங்கேகூட சொன்னார்கள் ஹிந்தியை ஏற்றுக்கொள் வதில்லை என்று 1930 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கின்றது. எப்பொழுதெல்லாம் ஹிந்தி தலையை நீட்டுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அதை தலையில் அடித்து, ஊரை விட்டு விரட்டியது தமிழ்நாடுதான்.

இன்றைக்கு மீண்டும் ஹிந்தியைக் கொண்டு வருவோம்; ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே கொடி என்று சொல்கின்றார்களே, அது எப்படி சாத்தியமாகும்?
இது நம்முடைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்காதா?

மிகப் பிரம்மாண்டமான நாடாக இருந்த சோவியத் ரஷ்யா என்னாயிற்று? உஸ்பெஸ்கிஸ்தான், கஜகிஸ்தான், உக்ரைன் என்று பல நாடுகள் ஒன்று சேர்ந்து பலமாக வல்லரசு நாடாக இருந்த ரஷ்யா, நாங்கள் சொல்வதைத்தான் மாநிலங்கள் கேட்கவேண்டும் என்று சொன்ன பிறகு, அந்த நாடு சுக்கு நூறாக உடைந்ததா, இல்லையா?
இந்தியா அதுபோல உடையவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இப்படியே நம்மீது அடக்குமுறைகளையும், அவர்களுடைய அபிலாஷை களையும் நம்மீது திணித்துக் கொண்டிருந்தால், நாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கின்றார்கள். கேட்டால், இசையிலே நான் மன்னன் என்று. இசையிலே மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கின்றவர்கள் எல்லாம் இசைய மைப்பாளராக ஆகிவிட முடியாது.

உணவிற்கு வழியில்லாமல், வறுமைக்கோட்டிற்குக் கீழே இருந்த நேரத்தில், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர்கள் – பணமும், புகழும் வந்தவுடன், அவர்கள் தங்களை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொள்கின்றார்களே, இது என்ன நியாயம்?

யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். ராஜாவும் – இளையராஜாவாம் – அவருக்கு வயது கிட்டத்தட்ட 80 ஆகப் போகிறது. கேட்டால், இளைய ராஜா. ஆரம்பத்தில் தொழிலாளிகள் நலம் பாடிய நீ – பணமும், புகழும் வந்தவுடன், இன்னமும் பேராசையின் காரணமாக, பணமும், புகழும் வரவேண்டும் என்கின்ற காரணத்திற்காக, நீ திடீரென்று பக்திமான் ஆகிவிட்டாய்; பக்திமான் ஆனது தவறு என்று சொல்லமாட்டேன்; அது உங்கள் விருப்பம்.
நான் எப்படி உன்னுடைய கருத்துக்கு மரியாதை கொடுக்கின்றேனோ, அதேபோல், நீ என்னுடைய கருத்துக்கு மரியாதைத் தரவேண்டும்.

அதைவிட்டுவிட்டு, மோடி, அம்பேத்கரைப் போன்றவர் என்று சொன்னால், என்ன அர்த்தம்?
யார் அம்பேத்கர்? அம்பேத்கர் செய்த தியாகம் என்ன? நாட்டிலே ஜாதிகள் இருக்கக்கூடாது; அதுவும் கீழ்த்தட்டில் இருக்கின்ற மக்கள் உயர வேண்டும் என்பதற்காக பல காரியங்களை செய்தவர்கள் என்ப தோடு மட்டுமல்ல, இந்து மதத்தில் ஜாதிகளை ஒழிக்க முடியாது என்கின்ற காரணத்தினால், நான் புத்த மதத்தை நாடுகின்றேன் என்று சொன்னார்.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ”தனியாகப் போய்ச் சேராதீர்கள்; 5 லட்சம், 10 லட்சம் பேரோடு போய்ச் சேருங்கள்” என்று சொன்னார்.

மும்பையில் மிகப்பெரிய கூட்டத்தோடு சென்று அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்தில் சேர்ந்தார்.
அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியாரிடம் சொன்னார், ”நீங்களும் வந்துவிடலாமே?” என்று.
அப்பொழுது தந்தை பெரியார் சொன்னார், ”நான் இந்துவாக இருந்தால்தான், இந்துக்களைக் கண்டிக்க முடியும்; வெளியில் இருந்து கண்டித்தால், இவன் வேறு மதத்தைச் சார்ந்தவன்; அப்படித்தான் சொல்வான் என்று சொல்லிவிடுவார்கள்” என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் அம்பேத்கர் என்பதோடு மட்டுமல்ல, இந்த இந்திய நாட்டிற்கே அரசமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத் தவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அம்பேத்ரை எப்படி நீ மோடியோடு ஒப்பிட்டுப் பேசலாம்!

ஓர் அரசிடம் உதவிப் பெற்று படித்த அவர், அப்படியே மேல்நோக்கிப் போயிருக்கலாம்; ஆனால் வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு, இழிநிலையில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கடைசி வரை உழைத்தாரே, அவரை எப்படி நீ மோடி யோடு ஒப்பிட்டுப் பேசலாம்!
கேடித்தனங்கள் செய்வதற்கு ஓர் அளவில் லையா, இந்த நாட்டில்? இதை எப்படி நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியும்.
நாளைக்கு என்ன சொல்வார்கள்?
மோடியும், பெரியாரும் ஒன்று; இரண்டு பேரும் தாடி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், என்ன நியாயம்?

உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு. முசோலினியோடு மோடியை ஒப்பிடு.அமித்ஷாவை, குள்ளக்கத்திரிக்காயோடு ஒப்பிடு – வேண்டாம் என்று யார் சொன்னார்கள்.

ஆனால், இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்களை நீங்கள் அசிங்கம் செய்யவேண்டும் என்று நினைத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது?

இளையராஜாவிற்கு ஒருமுறை அடிபட்டால் போதாது என்று நினைக்கின்றேன்.

இதேபோல்தான், ‘பெரியார்’ திரைப்படத்திற்கு இசை யமைக்கமாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா. சங்கராச்சாரியார் என்று நினைப்பு அவருக்கு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம்.

ஆக, இப்படிப்பட்ட ஜென்மங்களை ஒழித்தாக வேண்டும் என்று சொன்னால், நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய கரங்களை பலப்படுத்தவேண்டும்.

இன்றைக்கு அதனை முன்னெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர் களுடைய கரங்களை நாம் பலப்படுத்தவேண்டும்.

ஸ்டாலின் அவர்களை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். முதலமைச்சர் அவர்கள், நல்ல முதலமைச்சர் என்பதோடு மட்டுமல்ல, ஒரு தலைசிறந்த சுயமரியாதைக்காரராக, பகுத்தறிவாளராக இருக்கின்ற ஸ்டாலினை நான் பாராட்டுகின்றேன்.

ஆகவே, அருமை நண்பர்களே, நீங்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பாசிச சக்திகளை ஒழிக்கவேண்டும்.

தமிழர்களாகிய நாம் எப்பொழுதும் தலைநிமிர்ந்து நின்றுகொண்டிருக்கின்றோம்; அதேபோல், வருகின்ற காலங்களிலும் நாம் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்று சொன்னால், இந்த பாசிச சக்திகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி,

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் கரூர் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவேண்டும்.
இன்னும் சில நாள்களுக்கு அவருக்கு நீண்ட சுற்றுப்பயணம் இருக்கிறது. அதுவுமில்லாமல், அவருடைய உரையை நாம் கேட்கவேண்டிய இருப்பதால், இத்துடன் என்னுரையை உரையை முடித்து விடை பெறுகின்றேன். நன்றி, வணக்கம்!

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வாழ்த்துரையாற்றினார்.
– நன்றி – விடுதலை நாளிதழ்

Leave a Response