பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் கழக குமார் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது….
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வார் என்கிற நம்பிக்கை உள்ளது.
எதிர்க்கட்சி என்பதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்மறைக் கருத்துகளை வைக்கலாம். ஆனால் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற நாள் முதல் பொய்யான, தகுதிக்குத் தகாத கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இராஜபக்சே அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் தவறான ஆட்சி முறையால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மக்கள் ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமலும், கடும் மின் வெட்டாலும் அவதிப்படுகின்றனர். அதைப்போன்று மக்கள் விரோத ஆட்சியை ஒன்றிய அரசும் கடைபிடித்தால், இலங்கை நிலை தான் விரைவில் இந்தியாவிற்கும் ஏற்படும்.
இலங்கையில் இராஜபக்சே குடும்பத்தின் வீடுகளுக்கு முன்பு மக்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருப்பதால் உயிருக்குப் பயந்து எந்த நேரத்திலும் இராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லக் கூடிய சூழல் உள்ளது. பாஜகவினர் இராணுவத்தைத் தங்கள் பக்கம் வைத்துக் கொள்ளலாம், ஆனால் மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடித்தால் எந்த இராணுவத்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கையில் இராஜபக்சே குடும்பத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலைதான் மோடி அரசுக்கும், தமிழக பாஜக தலைவர்களுக்கும் ஏற்படும்.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.