காங்கிரசுக் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சார்ந்த காந்திச்செல்வன் என்ற குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும் இதையே கூறி வருகிறார்.
இதன் வரலாற்றுப் பின்புலத்தை நாம் பார்க்க வேண்டும்.
காங்கிரசு ஆட்சி ஏன் நீட் தேர்வைக் கொண்டு வந்தது? உச்ச நீதிமன்றத்தில் 2009 இல் ஒரு வழக்கு வந்தது. 412 கல்லூரிகளில் 35 வகையான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு வர வேண்டும் என்று சிம்ரெட் ஜெயின் என்பவரும் அவருடன் வேறு சிலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உச்சநீதிமன்றம் மருத்துவக் கவுன்சிலுக்கு ஒரே தேர்வு முறை வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் 2010 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி நீட் தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.
அப்போது அந்தக் கூட்டணியில் இருந்த திமுக எதிர்த்தாலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைப்பதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் 2006 ஆம் ஆண்டே திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வுகள் சட்டப்படி இரத்து செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு மறுத்து, மாநில அரசினுடைய உரிமை என்று கூறிவிட்டது.
பிறகு உச்சநீதிமன்றம் சென்றார்கள், உச்சநீதி மன்றம், ‘மருத்துவக் கவுன்சிலுக்கு நீட் தேர்வு முறையை உருவாக்குவதற்கே உரிமையில்லை’ என்று கூறிவிட்டது. அத்துடன் காங்கிரசு ஆட்சி இந்தப் பிரச்சனையை மூடி சமாதிக்கு அனுப்பிவிட்டது.
பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு தான் 2016 ஆம் ஆண்டு மருத்துவக் கவுன்சில் வழியாக உச்ச நீதிமன்றத்திற்கு மனு போட்டு, அவசரச் சட்டம் பிறப்பித்து நீட் தேர்வு முறையை இந்தியா முழுவதும் அமுல்படுத்தியது.
இப்போது,அதிமுக, திமுக ஆட்சியிலும் நாம் கேட்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் விதி விலக்கு தான். இந்திய ஒன்றியம் முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பது அல்ல. காங்கிரசு ஆட்சி கொண்டு வந்த நீட் தேர்வு இந்தியா முழுவதும் கொண்டு வந்தது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அப்போது விதிவிலக்கு இருந்தது.
எனவே இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏன் திமுக எதிர்க்கவில்லை என்று இப்போது ஓ.பன்னீர்செல்வம் கேட்பது அர்த்தமற்ற கேள்வி, இதே ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் தமிழ் தெரியாதவர்களும் தேர்ச்சி பெறலாம் என்று விபரீத ஆணையைப் பிறப்பித்து, பிற மாநிலத்துக்காரர்கள் தமிழ்நாட்டில் நுழையலாம் என்று ஏற்பாடு செய்த மாபெரும் துரோகி என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
– விடுதலை இராசேந்திரன்