ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளின் 35 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் படிக்கல் மற்றும் அணித்தலைவர் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.
அரை சதம் விளாசிய விராட் கோலி, 53 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த டிவில்லியர்ஸ் 12 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய படிக்கல் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களில் கேட்ச் ஆனார். டுபிளிசிஸ் 31 ரன்களிலும், மொயீன் அலி 23 ரன்களிலும் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
சுரேஷ் ரெய்னா(17 ரன்கள்), தோனி(11 ரன்கள்) இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை 9 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி, 7 வெற்றிகளும் 2 தோல்விகளும் பெற்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2 ஆவது இடத்தில் டெல்லி அணியும், 3 ஆவது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.