
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து வெளியாகும் “தெ ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.
கருத்தரங்கில் பேசிய எம்.கே.நாராயணன், சந்திரகாசன்
அதில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.
அந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, “எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறியபடியே அடித்தார்.
இதில் இரண்டு – மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்
தாக்கியவர் புதுக்கோட்டை பிரபாகரன்
திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை , அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.


