தாலிபான்களைக் கண்டு மக்கள் தலைதெறிக்க ஓடுவது ஏன்? – எழுத்தாளர் விளக்கம்

ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வரும் செய்திகள் அதிர வைக்கின்றன. விமானத்தின் சக்கரத்தின் மீதேறிக் கூட அங்கிருந்து தப்ப வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது ஏன்? என்பதை விளக்கும் வகையில் எழுத்தாஅரும் சமுதாயச் செயற்பாட்டாளருமான சர்மிளாசையித் எழுதியுள்ள பதிவு….

மூட்டைகளைத் தூக்கியபடி முட்டித் தள்ளிக் கொண்டு ஏன் ஆப்கான் மக்கள் எல்லை கடக்க ஓடுகிறார்கள்? வல்லரசுகளின் கூலிப்படைகளிடமிருந்து நாட்டை மீட்ட தாலிபானியர்களைத் தோளில் தூக்கிச் சுமந்து வெற்றி உலாப் போகவேண்டிய அந்நாட்டு மக்கள் ஏன் இப்படி அஞ்சி நடுங்குகிறார்கள்? ஏன் அங்குள்ள பெண்கள் நீர்த்தொட்டியில் மூழ்கிய குஞ்சுப் பறவைகளாகப் பரிதவித்துப் போய் இருக்கிறார்கள்?

ஏனென்றால், தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியது இது முதற் தடவையல்ல. 1996ஆம் ஆண்டிலும் தாலிபானியர்கள் தலைநகரைக் கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதி நகரங்களையும் சாலைகளையும் கட்டுப்படுத்தி ஆண்டார்கள். ஒரேயொரு மாகாணத்தைத் தவிர மற்றெல்லாப் பிரதேசங்களையும் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

இவர்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு இருந்த ஐந்தாறு வருடங்களில் சட்ட ஒழுங்குகளை ஷரீஆவாக்கினார்கள். திரைப்படம் பார்ப்பது, ஒளிப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டன. திரையரங்குகள் பல மூடப்பட்டு மசூதிகளாகவும் மதரசாக்களாகவும் பிரகடனப்படுத்தப்பட்டன. பல விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.

பெண் கல்வி மறுக்கப்பட்டது. பெண்களுக்குப் பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் செய்யப்பட்டது. பெண் தொழில் பார்ப்பது மறுக்கப்பட்டது. ஆணின் துணையின்றி பெண்கள் வெளியே நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது. பெண் உடல் முழுவதும் மூடியிருக்கும் உடை கட்டாயமாக்கப்பட்டது. ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயமானது. இந்த ஒழுங்குகளை மீறியவர்கள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மரணதண்டனை வரையும் அளித்துத் தண்டிக்கப்பட்டார்கள். சிறுமிகள் கூடப் பொது இடங்களில் கழுத்தறுத்துத் தண்டிக்கப்பட்டார்கள்.

கட்டாயத் திருமணம் முறைமை இருந்தது. திருமணத்திற்கு முன்பு மணமக்கள் சந்திப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

பெண் வியாபாரம் நடைமுறைக்கு வந்தது. பெண் வாங்கி விற்கும் அடிமைகள் வாராந்த சந்தையில் ஆண்கள் பெண்களை இழுத்து வந்து விற்பது, தான் கொண்டுவந்த பெண்ணுக்குப் பதிலாக இன்னொரு பெண்ணை மாற்றிக் கொண்டு செல்வது போன்ற நடைமுறைகள் இருந்தன.

உங்களில் பலருக்கு இவை நம்பமுடியாத பச்சைப் பொய்யாகவோ, கட்டுக் கதையாகவோ இருக்கும். தப்பிப் பிழைத்தவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை காதுகளால் கேட்டு விரல்களால் தொடும் தூரத்தில் அவர்கள் என் எதிரில் இருந்தபோதும் நானேகூட நம்புவமதற்கு நடுங்கிய உண்மைகள் இவை. யாரும் நம்ப மறுப்பதால் உண்மைகள் பொய்கள் ஆகிவிடாது.

தாலிபானியர்கள் நடாத்திய ஷரீஆ ஆட்சியில் அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள் எதற்கும் இடமில்லை. கம்யூனிச செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரக்ஞை கொண்டவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள்.

முஹம்மது நபியின் காலத்தை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு குடியுரிமைகள் எதுவுமற்ற ஒரு மதரசாவாக நாட்டை மாற்றிக் கொண்டிருந்தார்கள். மக்களை மதரசாப் பாலகர்களாக நடாத்தினார்கள். இவர்களின் ஆட்சிக்கு பாக்கிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், துர்மெனிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே இராஜதந்திர அங்கீகாரமளித்திருந்தன.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை எதிர்கொள்வதற்கு அஞ்சித்தான் மக்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடப் பார்க்கிறார்கள். தங்கள் கழுத்துக்களைத் தடவிப் பார்த்தபடியே வாழ்வதற்கு யார் விரும்புவார்கள்?

இங்கிருந்து கொண்டு தாலிபானியர்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு ”மததீவிரவாதம் அழகான குறும்பச்சை அது இஸ்லாம் வெறுப்பு” என்று வியாக்கியானம் பேசும் அரைகுறை சமூக விஞ்ஞானிகள் சட்ட வல்லுநர்களை எல்லாம் பார்சல் பண்ணி அங்கு ஏற்றிவிட்டு, மனித கௌரவத்தோடு உயிர் வாழ விரும்பும் மக்களில் சிலரை காப்பாற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response