அன்னைத் தமிழில் அர்ச்சனை – அலறும் புரோகிதர்கள்

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் 47 ஆகம கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கியிருக்கிறார். அதற்கான பெயர்ப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

முதலமைச்சரே இந்தப் பெயர்ப்பலகையை வெளியிட்டதன் வழியாக தமிழக அரசு இந்த தமிழ் வழிபாட்டு உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. இதற்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் கோயில் “மயிலை கபாலீஸ்வரர் கோயில்” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறிவிப்புப் பலகையில் தமிழ் வழிபாடு நடத்த விரும்பும் பக்தர்கள் தமிழ் மந்திரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தமிழ் ஓதுவார் அழைபேசி எண் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சமஸ்கிருத மந்திரங்களை ஓதி வரும் பாலாஜி குருக்கள் நாங்களும் தமிழில் அர்ச்சனை செய்யத் தயார் என்று இப்போது அறிவித்திருக்கிறார்.

தமிழ் மறை ஓதூவோர்கள், எங்கே தங்கள் வருமானத்தை பறிப்பதோடு தங்களது பாரம்பரிய உரிமைக்குரிய இடத்தை பிடித்துக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் போலும், இந்த அச்சத்தினால் இப்படிப் பேசுகிறார்கள் போல் இருக்கிறது.

வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு நாளும் நான்கு முறை பூஜை நடக்கிறது. அது வடமொழியிலான சமஸ்கிருதத்தில் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாலை பூஜை மட்டும் தமிழில் நடத்தி வருவதாகவும் வேத புரோகிதர்கள் தரப்பில் இப்போது கூறப்படுகிறது.

இது 60 ஆண்டு காலப் போராட்டம். தமிழ் வழிபாட்டு உரிமைக்காகப் பலரும் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

தமிழிலும் வழிபாடு நடத்தப்படும் என்று கோயில்களில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. பிறகு படிப்படியாக அந்த அறிவிப்புப் பலகைகள் காணாமலே போய்விட்டன.

1971 இல் திமுக அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ‘கண்ணப்பன்’ அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். பிறகு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் இதை வழி மொழிந்தார்.1974 இல் ஒரு புரட்சிகர அறிவிப்பை கலைஞர் வெளியிட்டார். சமஸ்கிருதத்தை கோயிலில் இருந்து வெளியேற்றம் செய்தார்.

தமிழில் மட்டுமே அர்ச்சனை என்ற அறிவிப்பை அறநிலையத்துறை வழியாக கலைஞர் வெளியிட்டார். அவ்வளவு தான், பூதேவர்கள் நாடே பற்றி எரிவது போல கூக்குரல் இட்டார்கள். ஆணை ஒரு வாரத்திற்குள்ளாகவே திரும்பப்பெறப்பட்டது என்பது கடந்த கால வரலாறு.

1980 இல் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனும் தமிழ் வழிபாட்டுக்குக் குரல் கொடுத்தவர் தான். ஆனாலும் பூதேவர்கள்,வேத புரோகிதர்களின் திட்டமிட்ட சதியால் தமிழில் ஒலி கோயிலுக்குள் கேட்கவே முடியவில்லை.

தில்லை நடராசர் கோயிலில் தீட்சதர்கள் தேவாரம் பாடிய வயது முதிர்ந்த ஆறுமுகனார் என்ற ஓதுவாரை ரவுடித்தனமாக தாக்கி இரத்தம் சிந்த சிந்த வெளியே இழுத்துப்போட்டார்கள். இறுதி மூச்சு வரை அந்த ஓதுவார் போராடிப் போராடி உயிர் நீர்த்தார். நடராசன் காதில் தேவார, திருவாசகம் கேட்பதே தீட்டு என்று கருவறைக்கு வெளியே ஒரு இடத்தில் தேவாரத்தைப் பாடிக்கொள் என்று தீட்சதர்கள் அனுமதித்தார்கள். அதற்கும் நீதிமன்ற போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது.

பக்தி உணர்வுள்ள தமிழர்கள் ஆதரவு தான் இதில் மிகவும் முக்கியம்.தமிழில் வழிபாடு நடத்து, என்ற உணர்வை பக்தியில் மூழ்கியுள்ள தமிழர்கள் மொழி இன உணர்வோடு தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழக அரசு எடுக்கும் இந்த இயக்கம் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்லும்.

– விடுதலை இராசேந்திரன்

Leave a Response