மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பாஜக ஆதரவு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசுமேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மேகதாது அணை பிரச்சினை குறித்து விவரிக்கையில், “தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அண்மையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, “இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரினார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது எனக்கோரி கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோது, ‘இந்த அணை கட்டுவதால், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும்’ என்றும், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும்’ என்றும் திட்டவட்டமாக விளக்கி, ‘இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என உறுதிபடத்தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதினார்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணைப் பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (12.7.2021 – திங்கள்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை – தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் தங்களின் கருத்துகளை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் : 1

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான 2 அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.

தீர்மானம் : 2

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தீர்மானம் : 3

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது”

ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. தமிழக நலன், விவசாயிகள் நலன், டெல்டா நலனுக்கான நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி; கர்நாடகாவில் உற்பத்தியாவதால் காவிரி நீர் அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் தமிழகத்திற்குச் சொந்தமானவை. காவிரியில் கர்நாடகாவுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு தமிழகத்திற்கு உள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்றால் நீதிமன்றம் மூலமாக தீர்வு காண முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது…

தமிழக அரசின் முடிவுக்கு தமிழக பாஜக முழு ஆதரவு அளிக்கும். தமிழக மக்களின் நலன் எதுவோ அதை தான் தமிழக பாஜக பார்க்கும். காவிரி ஆணையத்திற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் எனக் கூறினார்.

இவ்விசயத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிகளும் ஒரேகுரலில் பேசியிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Leave a Response