ராஜபாளையம் தொகுதியில் தெலுங்கில் பரப்புரை செய்யும் கவுதமி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அது எந்தெந்த தொகுதிகள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கவுதமி பாஜக சார்பில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து, அவர் கடந்த 2 மாதங்களாக ராஜபாளையத்தில் குடியேறி கட்சிப் பணிகளைத் தொடங்கினார். ராஜபாளையம் மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் பாஜகவினர் தங்களது கட்சி சின்னமான தாமரை சின்னத்தை வரைந்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த வாரம் பேட்டியளித்த நடிகை கவுதமி, கட்சியின் மேலிட உத்தரவின்பேரில் தான் கட்சிப் பணிகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ராஜபாளையம் தொகுதி வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

அத்தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தெலுங்கில் பேசி உறவாடிவருகிறாராம்.

அதோடு தொகுதியில் உள்ள பாஜகவின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்களையும் சந்தித்துப் பேசி பரப்புரைக்கு வலுச்சேர்த்துக் கொண்டிருக்கிறாராம் கவுதமி.

அண்மையில் திரைப்பட நடிகையும் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான திருமதி கவுதமியை திரைப்பட நடிகரும்,பாரதிய ஸன்ஸ்கிருதி சுரக்‌ஷா ஃபவுண்டேஷனின் தமிழகத் தலைவருமான செந்தில் குமரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

அச்சந்திப்புக்குப் பின், கவுதமி மிகச் சரியாகத் திட்டமிட்டு தேர்தல் வேலைகளைச் செய்கிறார் அதனால் தொகுதிக்குள் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்கிறார்.

இவற்றால் ராஜபாளையம் தொகுதி பாஜகவுக்குத்தான் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Response