தமிழர்களைப் புறக்கணிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரிப் பொறியாளர் தேர்வை இரத்து செய்க என்கிற கோரிக்கையை முன்வைத்து திருமுதுகுன்றத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அதுகுறித்த செய்திக்குறிப்பு….
தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவரை பணியில் அமர்த்தும் நெய்வேலி நிலக்கரிப் பழுப்பு நிறுவனத்தைக் கண்டித்தும், பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்யக் கோரியும் இன்று (09.02.2021) காலை – கடலூர் மாவட்டம் – திருமுதுகுன்றத்தில் (விருத்தாச்சலத்தில்) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டனப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெய்வேலி நிலக்கரிப் பழுப்பு நிறுவனத்தில் பட்டதாரிப் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு பட்டயக் கணக்காளர்கள், மனித வளப் பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு மின்துறை, சுரங்கத்துறை, கணினி, நிதி, மனித வளம் போன்ற துறைகளுக்கான 259 நிரந்தரப் பணிகளுக்கா நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் கடந்த 30.01.2021 அன்று வெளியிடப்பட்டது. அதிலுள்ள 1582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் தான்! நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிலேயே 8 பேர்தான் தமிழர்கள் என்றால், ஒருவரைக்கூட நேர்முகத் தேர்வில் பணிக்குத் தேர்வு செய்வார்களா என்பது ஐயம்!
தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களையோ, அந்நிறுவனப் பணியிலிருந்து இறந்தோரின் வாரிசுகளையோ, பழகுநர் பயிற்சி முடித்தவர்களையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களையும் வடநாட்டுக்காரர்களையும் தொடக்க ஊதியமே 60,000 ரூபாயுள்ள இந்த நிரந்தரப் பணிகளில் சேர்ப்பது தற்செயலானது அல்ல – திட்டமிட்ட தமிழின ஒதுக்கல் கொள்கை என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டன அறிக்கை வெளியிட்டார்.
இதனையடுத்து, இன்று (09.02.2021) நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் இந்த நேர்முகத் தேர்வை இரத்து செய்துவிட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு இப்பணிகளுக்கு 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களையே சேர்க்கும் வகையில் ஒதுக்கீடு வழங்கி, பணியமர்த்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று (09.02.2021) செவ்வாய் காலை திருமுதுகுன்றத்தில் (விருத்தாச்சலத்தில்) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) – பாலக்கரை அம்மா உணவகம் அருகில், இன்று (09.02.2021) காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமை தாங்கினார்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் ஆ.குபேரன், பெண்ணாடம் – மாந்த நேயப் பேரவை பஞ்சநாதன், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் சி.பிரகாசு, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, வே.தமிழ்மொழி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தி.சின்னமணி, வழக்குரைஞர் மு.செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து கண்டன உரையாற்றினார். தே.இளநிலா நன்றி கூறுகிறார்.
நிகழ்வில், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க.கண்ணதாசன், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், சிதம்பரம் த.தே.பே. க.வேந்தன் சுரேசு, சு.கலைச்செல்வன், சு.சுகன்ராஜ், சுதாகர், கடலூர் மணிகண்டன், சீர்காழி நகரச் செயலாளர் செ.அரவிந்தன், அ.இராமச்சந்திரன், பெண்ணாடம் க.காமராசு, தி.வேல்முருகன், மு.பொன்மணிகண்டன், சி.பிரபாகரன், பாலசுப்ரமணியன், சோபன்ராசு, அன்புதுரை, சக்திமுருகன், கருப்புசாமி, மகளிர் ஆயம் வித்யா, கயல் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.