தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு – 5 மாநிலத் தேர்தல்களில் பாசக மண்ணைக் கவ்வும்

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து உயர்ந்துகொண்டே வருகிறது. அதன்படி தொடர்ந்து விலை அதிகரித்துவந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 51 காசுக்கும், டீசல் 79 ரூபாய் 21 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டன.

அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. 29 நாட்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 6 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்தும் உயர்வை நோக்கியே சென்றது.

அதன்பின்னர், கடந்த 27 ஆம் தேதிக்குப் பிறகு விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், ஒரு வார இடைவெளிக்கு பின் கடந்த 4, 5-ந்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்த உயர்வுக்குப் பிறகு 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அதன் விலையில் மாற்றம் இல்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

அதன்படி, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 89 ரூபாய் 96 காசுக்கு விற்பனை ஆனது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலையை பொறுத்தவரையில் நேற்று லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 82 ரூபாய் 66 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஆனால் அது நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.இதனால் விரைவில் வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாசகவும் அதன் ஆதரவுக் கட்சிகளும் மண்ணைக் கவ்வும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response