அன்புமணிக்கு துணைமுதல்வர் பதவி கேட்ட இராமதாசு? – அமைச்சர்கள் சந்திப்பில் நடந்ததென்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பரப்புரை உத்தி உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாசக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிகத் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பாசக 60 தொகுதிகளைக் கேட்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பாசகவுக்கு எவ்வளவு தொகுதிகளைக் கொடுக்கிறீர்களோ அவ்வளவு தொகுதிகளை எங்களுக்கும் தர வேண்டும் என்று பாமக நிபந்தனை விதித்துள்ளது.அதுமட்டுமின்றி வடமாவட்டங்களில் எங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகம் உள்ளதால், தங்களுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் தேர்தலுக்கு சில உதவிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிமுக தரப்பில் இருந்து உறுதியான எந்த தகவல்களும் கொடுக்கப்படவில்லை. பாசக அதிக இடங்களைக் கேட்பதால், பாமகவுக்கு 20 முதல் 25 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதனால், அதிமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? இல்லையா? என மருத்துவர் ராமதாசு இதுவரை பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

டிசம்பர் 31 ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்ய விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்போது, தங்களுக்கு துணை முதல்வர் பதவி, அதிக தொகுதிகள், தேர்தலுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் சில உதவிகள் செய்ய வேண்டும் என ராமதாசு கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, அமைச்சர்கள் உறுதியான எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

டிசம்பர் 27 ஆம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று தேர்தல் பரப்புரைப் பணிகளை தொடக்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர் என்று முறையில் ராமதாசு பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அதற்கு ராமதாசு தங்களது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன் எனக் கூறி உள்ளார்.

அமைச்சர்கள் ராமதாசை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக நடத்திய போராட்டத்தை ஆட்சியாளர்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளாததால் கடும் அதிருப்தியில் இருந்துவந்த ராமதாசு அமைச்சர்களிடம் கூட்டணி சம்பந்தமாக எந்த சாதகமான பதிலையும் கூறாமல் திருப்பி அனுப்பி விட்டார். பாமகவுக்கு எத்தனை தொகுதி, எந்நெந்த தொகுதி என எந்த முடிவும் எடுக்காத நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ராமதாசு அமைச்சர்களிடம் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் 2 அமைச்சர்களும் நேராக திண்டிவனம் சென்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்னை திரும்பியிருக்கின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலின்போது பாமகவுடன் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது முக்கிய பங்காற்றிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இந்த முறை பேச்சுவார்த்தைக்குப் போகாமல் ஒதுங்கிவிட்டார்.

பாராளுமன்றத் தேர்தலின்போது விழுப்புரம் தொகுதியில் பாமக போட்டியிட்டது. அமைச்சர் சண்முகம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். ஆனால் பாமகவால் வெற்றிபெற முடியவில்லை. அதிமுகவினர் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றாததால் தான் பாமக தோல்வி அடைந்ததாக அமைச்சர் சண்முகம் மீது ராமதாசு அதிருப்தியில் இருந்துவந்தார். இதனால் தான் திண்டிவனத்தில் இருந்தபோதும் இந்த முறை சி.வி சண்முகம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறதா? இல்லையா? என்பது டிசம்பர் 31 ஆம் தேதி நடக்கும் பாமக பொதுக்குழுக்கூட்டத்துக்குப் பின்னர்தான் தெரியவரும் என்கிறார்கள்.

Leave a Response