சென்னையில் தொடரும் மழை – செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரிகள் நிரம்பின. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஏரிக்கு 1,050 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 22.23 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,179 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீருக்காக 966 கன அடி நீர் திறக்கப்பட்டது.

ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியிலேயே வைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டமாக நேற்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக 5 கண் மதகு வழியாக 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

உபரி நீரை திறந்து விடுவதற்கு முன்பு, உபரிநீர் திறக்கப்படுவதால் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி செல்போன்களில் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. அத்துடன் 2 முறை எச்சரிக்கை மணியும் ஒலிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புரெவி புயலால் பெய்து வரும் மழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீராக நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 158 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 22.15 அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால் நேற்று மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் காவலூர், குன்றத்தூர், நத்தம் திருமுடிவாக்கம், திருநீர்மலை வழிநிலைமேடு பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து, அதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 3 இரவு முதல் டிசம்பர் 4 (இன்று) காலையும், சென்னை எழும்பூர், கொரட்டூர், புரசைவாக்கம், அயனாவரம், ராயபுரம், கோடம்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, திருவற்றியூர், கே.கே.நகர், தண்டையார்பேட்டை, சிந்தாரிப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, வானகரம், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

Leave a Response