நிவர் புயல் – சென்னை கடலூர் புதுச்சேரி பாதிப்பு நிலவரங்கள்

நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செ.மீட்டரும், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் 27.8 செ. மீட்டரும், கடலூரில் 27.5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஷெனாய் நகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் இடையூறாக சாலையில் சாய்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலையில் திருவண்ணாமலை அருகே நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் திருவண்ணாமல, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என கூறியுள்ளனர். புயல் வலுவிழந்ததால் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார். அதிதீவிர கனமழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று மாலை கிழக்குக் கடற்கரைச் சாலை சீல் வைக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்ததையடுத்து தடுப்புகள் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் நாராயணசாமி நேரில் ஆய்வு செய்தார். சூறைக் காற்றில் முறிந்து விழுந்த மரங்களை மீட்புக் குழுவினருடன் சேர்ந்து நாராயணசாமி அகற்றினார். புயல் பாதிப்பு தன்மை குறித்து மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் பாதிப்புகளைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர் செல்கிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் சென்று புயல் பாதிப்புகளைப் பார்வையிடுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பாரதிநகர், தரமணி உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு வருகிறார்.

Leave a Response