சசிகலா சீமான் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கியுள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,100 நாட்கள் தேர்தல் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது பரப்புரையை கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்க முடிவு செய்திருந்தார்.

இதற்காக நேற்று (நவம்பர் 20,2020) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து நேற்று மாலை திருக்குவளைக்குச் சென்றார். அங்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கலைஞர் பிறந்த இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் பரப்புரை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

உதயநிதி ஸ்டாலின், பரப்புரை செய்யும் மேடை அருகே வருவதற்கு முன்னே, தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா தலைமையில் 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இல்லத்தின் உள்ளே சென்று அங்குள்ள சிலைகள், திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தார்.

அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறிய உதயநிதிஸ்டாலின், பேசத் தொடங்கியதும், உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப் போவதாகக் கூறினர். அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் காவல்துறைக்கு எதிராக போலீஸ் அராஜகம், ஒழிக என்று முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து உதயநிதிஸ்டாலின், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டிகலைவாணன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் மதிவாணன், டிஆர்பி ராஜா, ஆடலரசன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்தனர். மாலை 5.30 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில்….

எடப்பாடி அரசு, மத்தியில் ஆட்சி செய்யும் பாசக அரசு ஆகியவற்றின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து பிரசாரத்தை திட்டமிட்டபடி வரும் மே மாதம் வரை நூறு நாட்கள் நடத்துவேன்.

தமிழக முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி பிரசாரங்கள் செய்து வருகிறார்.அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

காவல்துறையை வைத்து கைது செய்வோம் என்று என்னை மிரட்டுகின்றனர். என் பிரசாரத்தை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் நான் திட்டமிட்டபடி பிரசாரத்தை மேற்கொள்வேன்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தலைமைக் கழகம் முடிவு செய்யும் இடத்தில் நான் போட்டியிடுவேன். மறைந்த அதிமுக அமைச்சர் துரைக்கண்ணு பிரேதத்தை வைத்துக்கொண்டு பலகோடி பேரம் பேசிய கேவலமான ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழல் தான். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் அனைவரும் உள்ளே செல்வார்கள்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசுக் கட்சியைக் கழற்றி விட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும் சீமான் கூறுகிறார். இது அவரது சொந்த கருத்து. யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் புதிதாகக் கட்சிகள் சேர்வதும், ஏற்கனவே இருக்கும் கட்சிகள் விலகுவது குறித்தும் தலைமைக் கழகம் முடிவு செய்யும்.

தேர்தலில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால ஊழல், கொலை, கொள்ளை ஆகியவற்றை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்யப்படும்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக பலம் அதிகரிக்குமா என்பது குறித்து அவர் வெளியே வந்த பின்னர் பார்த்துக் கொள்வோம்.

கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டிய அதிமுக அரசு அதையே காரணம் காட்டி ஊழல் செய்தது. இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response