எடப்பாடி பழனிச்சாமி மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறைப் பயணத்தை இரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் பழனிச்சாமியின் தாயார் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுசெயலாளர் பொன்முடியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஏற்கனவே தொலைபேசியில் ஆறுதல் கூறிய நிலையில் நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இச்சந்திப்பு மிகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.அரசியல் கருத்துவேறுபாடுகளைத்தாண்டி மனிதநேயத்துடன் நாகரிகமாக மு.க.ஸ்டாலின் நடந்துகொண்டிருக்கிறார் என்று பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response