முந்தும் எடப்பாடி முரண்டுபிடிக்கும் ஓபிஎஸ் – அதிமுக பரபரப்பு

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தற்போது உருவாகியுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த செப்டெம்பர் 18 ஆம் தேதி உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது.

அதில் முடிவு எட்டப்படாததால் 28 ஆம் தேதி செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்கள்.

இதன்படி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 283 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றியவுடன், திடீரென அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, ‘‘முதல்வர் வேட்பாளர் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அவர் ஆரம்பித்து வைத்ததை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, செம்மலை ஆகியோர் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

ஜெ.சி.டி.பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகப் பேசினார். கே.பி.முனுசாமி, பால்மனோஜ்பாண்டியன் ஆகியோர் நடுநிலை வகித்தனர்.

இதனால் முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது, மேலும் பல தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதுவரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக 8 ஆலோசனைக் கூட்டங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் மற்ற அமைச்சர்களுடன் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார். ஆனால் நேற்றைய கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.

அதேநேரத்தில்,கட்சிக்குள் தமக்கு ஆதரவு மிகக்குறைவாக இருப்பதால் பாஜகவின் உதவியை நாட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.இதற்காக பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அனுமதி கிடைத்ததும் டெல்லி செல்ல பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளாராம். அப்போது நட்டாவையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்றரை ஆண்டுகால ஆட்சி காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவில் ஆதரவு அதிகமிருக்கிறது.இந்த நேரத்தில் திடீரென ஓ.பன்னீர்செல்வம் முரண்டு பிடிப்பதால் மேலும் பலவீனம்தான் ஏற்படும்.இப்போதைய சூழலில் ஆட்சி போகும் என்றாலும் கட்சி உறுதியாக இருக்கும். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் செயலால் ஆட்சி மட்டுமின்றி அதிமுக கட்சியும் சிதறிப்போகும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

Leave a Response