வடக்கில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை இந்தியா எதிர்கொள்கிறது. அதேநேரம் இந்தியாவின் தெற்கெல்லையிலும் சீனா அழுத்தமாகக் காலூன்றி வருகிறது. இதனால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து சூழவிருக்கிறது என்பதை விளக்கும் பழ,நெடுமாறன் கட்டுரை…….
இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் ஆகச்டு முதல் வாரத்தில் நடைபெற்று எதிர்பார்த்தப்படியே இராசபட்சேயின் குடும்பக் கட்சியான இலங்கை பொதுசன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல்பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.
இதுவரை இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல் போன்றவற்றைக் கண்காணிப்பதற்காகக் காமன் வெல்த் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் சார்பில் 100-க்கும் அதிகமான சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் படுவதைச் சிங்கள அரசுகள் அனுமதித்தன. ஆனால் கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் இப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சர்வதேசக் கண்காணிப்பாளர் குழு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் சட்டத்தை தனது விருப்பப்படி திருத்தவும் சனநாயகத்தை வீழ்த்தி சர்வதிகார ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கான வலிமையையும் இராசபட்சே பெற்றிருக்கிறார். சிங்கள இனவெறியைத் தூண்டி அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றியிருக்கிற இராசபட்சேயின் ஆட்சியில் தமிழர்களை மேலும் மேலும் ஒடுக்கியும் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் உரிமைகளை அடியோடு பறித்தும் ஆடாத ஆட்டமெல்லாம் அவர் ஆடுவார் என்பதில் ஐயமில்லை.
குரங்கு ஒன்று தென்னை மரத்தில் ஏறியது. கள் இறக்குவதற்காக அதில் கட்டியிருந்த கலையத்திற்குள் தலையை நுழைத்து கள்ளைக் குடித்தது. பானைக்குள்ளேயிருந்த தேள் ஒன்று அதைக் கொட்டியது. வலிதாங்காமலும் தேள் கொடுக்கின் நஞ்சு தலைக்கு ஏறிய நிலையில் குரங்கு மரத்திலிருந்து கீழே விழுந்தது. அதுவே குரங்கு. சேட்டைக்குப் பேர் போனது. கள்ளைக் குடித்துத் தேளால் கொட்டப்பட்டு துடித்த நிலையில் அது ஆடிய ஆட்டம் குறித்து தமிழ்ப் பாடல் ஒன்று விவரிக்கிறது.
அந்த குரங்கின் நிலையில் இராசபட்சே தனது சர்வாதிகார ஆட்டத்தினை தொடங்கியிருக்கிறார். தமிழர்களுக்கு அவரால் கேடு விளையும் என்பது உண்மையானாலும் எண்ணிக்கையில் அதிகமான சிங்கள மக்களுக்கு விளையப்போகும் கேடு பலமடங்கு அதிகமானதாகும்.
“ஆரிய இனம் உயர்ந்த இனமாகும் அதிலும் தூய ஆரிய இனத்தவரான செர்மானியர் உலகை ஆளப்பிறந்தவர்களாவர். பிற இனத்தவரெல்லாம் இந்த உலகில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்” என்று செர்மானிய மக்களுக்கு இனவெறியை ஊட்டினான் இட்லர். அவன் ஊட்டிய இனவெறி போதையில் மயங்கிய செர்மானிய மக்கள் அவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமர்த்தினர். அதற்குப் பிறகு அந்த மக்களுக்கு தேர்தலை நேர்கொள்ளவோ அல்லது வாக்களிக்கும் உரிமையையோ அவன் தரவில்லை. சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினான்.
யூதர்கள் உள்பட பிற இன மக்களை இட்லரின் படைவீரர்களும் நாசிக்கட்சியைச் சேர்ந்த குண்டர்களும் கொன்று குவித்தபோது செர்மானிய மக்கள் அதைக்கண்டு மகிழ்ந்தனர். உலகமும் வேடிக்கைப் பார்த்தது. அதன் விளைவு என்னவாயிற்று?
இரண்டாம் உலகப்போரை இட்லர் மூட்டினான். ஐரோப்பிய நாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக ஆக்கிரமித்தான். அவன் கைப்பற்றிய நாடுகள் அனைத்திலும் இலட்சக் கணக்கான யூதர்களும் பிற இன மக்களும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். வெற்றிமேல் வெற்றி பெற்று ஐரோப்பா முழுவதுமே தனது கட்டுப்பாட்டுக்குள் இட்லர் கொண்டுவந்த போது செர்மானிய மக்கள் அளவுக்கடந்த உற்சாகம் அடைந்தனர். உலகையே நாம் ஆளப்போகிறோம் என்ற கனவில் மிதந்தனர்.
ஆனால் இரண்டாம் உலகப்போரின் முடிவு என்னவாயிற்று என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஐரோப்பாவையே சுடுகாடாக்கிய இட்லர் தனது சொந்த நாடான செர்மனியை மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலைக்கு ஆளாக்கினான். அவனும் அழிந்தான். அவனுடைய பாசிசக் கட்சியும் புதைக்குழிக்குப் போயிற்று. இட்லரின் இனவெறியாட்டத்திற்கு துணை நின்ற செர்மானிய மக்கள் பேரழிவை எதிர்க் கொள்ள நேர்ந்தது, அந்நாடு நான்கு கூறுகளாகப் போடப்பட்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத்நாடு ஆகியவற்றால் பங்கிட்டுக் கொள்ளப்பட்டது. இந்த அடிமை நிலையிலிருந்து செர்மானிய மக்கள் மீண்டும் எழுந்து நிற்க அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலானது. இன்னமும் செர்மனியில் இட்லரின் பெயரை உச்சரிப்பதற்கோ அவனது நாசிக்கட்சியை பற்றி பேசுவதற்கோ அந்த மக்கள் வெட்கிக் கூசுகிறார்கள். இட்லரைப்பற்றிய நினைவையே தங்களது வரலாற்று ஏடுகளிலிருந்து துடைத்தெறிந்து விட்டார்கள்.
இலங்கை விடுதலைப் பெற்ற 1948-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். படிப்படியாக அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. சிங்களம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அந்நாட்டு இராணுவத்திலோ, காவல் துறையிலோ தமிழர்களுக்கு இடமளிக்கப் படவில்லை பாரம்பரியமாக தமிழர்களுக்குச் சொந்தமான மண்ணில் சிங்களர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர். தமிழர்களுக்கு எதிராக இராணுவ அடக்குமுறைகள் ஏவப்பட்டன. இலட்சகணக்கானத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இனவெறியாட்டத்தை எந்த சிங்களக் கட்சியும் கண்டிக்க முன்வரவில்லை. மாறாகத் தமிழர்களை ஒடுக்குவதில் சிங்களக் கட்சிகளுக்கிடையே போட்டாபோட்டியிருந்தது. அதிகமான அளவில் இனவெறியை ஊட்டிய சிங்களத் தலைவரையே சிங்கள மக்கள் தொடர்ந்து ஆதரித்தனர். இன்றும் ஆதரிக்கின்றனர்.
செர்மானிய மக்கள் மனித நேயத்தை மறந்து கண்மூடித்தனமாக இட்லரின் இனவெறியை ஆதரித்து நின்றதின் விளைவாக எத்தகைய பேரழிவை அந்த மக்களும், அந்த நாடும் சந்திக்க நேர்ந்தது என்பதை வரலாற்று ஏடுகள் பதிவு செய்துள்ளன இந்த உண்மையை உணராமல் இன்றைய சிங்கள மக்கள் நவீன இட்லரான இராசபட்சேயை மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்துள்ளனர். அதன் விளைவை எதிர்காலத்தில் சந்திப்பார்கள் என்பது வரலாற்று நியதியாகும்.
தமிழர் பிளவு
இராசபட்சே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் நமது எதிர்காலம் பாழ்ப்பட்டு போகும் என்பதை தமிழர்களும் எண்ணிப் பார்க்காமல் பிளவுப்பட்டு இத்தேர்தலைச் சந்தித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 29-இடங்களுக்கானத் தேர்தலில் தமிழர்களின் 12-கட்சிகள் போட்டியிட்டுள்ளன. சுயேட்சைக் குழுக்கள் என்ற பெயரில் 28-குழுக்களின் சார்பில் பலர் போட்டியிட்டனர். புதிய சிறிய கட்சிகள் 9 போட்டியிட்டன. தமிழர் தொகுதியில் சராசரியாக ஒரு இடத்திற்கு 60-பேர் வரை போட்டியிட்ட அவலம் நிகழ்ந்தது. பலமுனைப் போட்டியின் விளைவாக வாக்குகள் சிதறின.
கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலும் அதற்கு பின்னர் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் ஒற்றுமையாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிய காலமும் இருந்தது. 1977-ஆம் ஆண்டில் தமிழர் பகுதியிலிருந்த 19-இடங்களில் 18-இடங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி வென்றது. 1983-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கானத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்தபோது 95% மக்கள் அதை ஏற்றனர். 2004-ஆம் ஆண்டில் புலிகள் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமுள்ள 22-இடங்களையும் கைப்பற்றியது. 2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று 95% மேற்பட்ட தமிழர்கள் வாக்களிக்க வரவில்லை. 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழர் பகுதியிலிருந்த 36-இடங்களில் 30-இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றது.
தமிழீழப் பகுதியில் இதுவரை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மாநிலச் சட்டமன்றத்திற்கானத் தேர்தல் ஆகியவற்றில் சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் குறைந்தளவு வாக்குகளைப் பெறுவதைக் கூட தமிழர்கள் அனுமதித்ததில்லை. தமிழீழ மண்ணில் சிங்களக் கட்சிகள் காலுன்ற விடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாகயிருந்தனர். இதன் மூலம் உலகிற்கு அவர்கள் தெரிவிக்க விரும்பியச் செய்தி என்னவென்றால் “இலங்கையில் தமிழர்-சிங்களர் ஆகிய இரு தேசிய இனங்கள் உள்ளன இந்த இரு இனங்களும் வாழ்கின்றப் பகுதிகள் வெவ்வேறானவை. தமிழர் பகுதியில் சிங்களக் கட்சிகளுக்கு எவ்விதமான ஆதரவுமில்லை” என்பதையே அவர்கள் தெரியப்படுத்தினர்.
ஆனால் இப்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமைப்படுத்தும் தலைமையும் இல்லை. சம்பந்தம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 9-இடங்களிலும் (28.01%), கசேந்திர குமார் தலைமையில் உள்ள அகில இலங்கைத் தமிழ் காங்கிரசுக்கட்சி 1-இடத்திலும் (6.26%), டக்லசு தலைமையிலுள்ள ஈழ மக்கள் சனநாயகக்கட்சி 2-இடங்களிலும் (5.65%), விக்னேசுவரன் தலைமையிலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 1-இடத்திலும் (4.76%), கருணா தலைமையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1-இடத்திலும் (6.28%), அக்கிம் தலைமையிலுள்ள இலங்கை முசுலிம் காங்கிரசு 1-இடத்திலும் (3.19%) வெற்றி பெற்றுள்ளன. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள இடங்கள் 22 ஆகும். மலையகப் பகுதியில் 5-தமிழர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். (அடைப்புக் குறிக்குள் கட்சிகள் பெற்றவாக்குகளின் சதவிகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது)
சிங்களர் வெற்றி
வட-கிழக்குப் பகுதியில் சிங்களக் கட்சிகளினால் நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளர்கள் ஒருபோதும் வெற்றிப் பெறுவதில்லை. ஆனால், இந்த தடவை இராட்பட்சேயின் இலங்கை பொதுசன பேரம்பனா கட்சி 3-இடங்களிலும் (13.42%), சுசித் பிரேமதாசாவின் சமாசி சனபால வேகயா கட்சி 3-இடங்களிலும் (15.42%), சீறிசேனாவின் இலங்கை சுதந்திரக்கட்சி 1-இடத்திலும் (4.58%) வெற்றிப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் பகுதியில் 3-முக்கிய சிங்களக்கட்சிகள் 7-இடங்களைக் கைப்பற்றி உள்ளன.
தமிழீழப் பகுதியில் போட்டியிட்ட தமிழர் கட்சிகள் அனைத்தும் பெற்ற வாக்குகளின் மொத்த சதவிகிதம் 55.59% ஆகும். சிங்களக்கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் சதவிகிதம் 33.42% ஆகும். தமிழர் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பெருமளவுக்குச் சிங்களக் குடியேற்றமும், சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவும் பெருகிவிட்டன என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது.
தமிழர் பகுதியில் சிங்களக்கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியும் வாக்குகளின் எண்ணிக்கையும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய அறிவிப்பாகும். சிங்கள மக்கள் தொடர்ந்து தமிழர் பகுதியில் குடியேறுவதற்கான உற்சாகத்தையும், துணிவையும் இத்தேர்தல் முடிவுகள் அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மிக அதிகமான பெரும் பான்மையுடன் இராசபட்சே பெற்றிருக்கும் வெற்றியைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றங்களை அதிகரிப்பார்.
தமிழர் பகுதியில் சிங்களக்கட்சிகள் பெற்றுள்ள வெற்றிக்கு தமிழரிடையே ஒற்றுமையில்லாமல் போனதும் ஏராளமான சிங்களர்கள் குடியேற்றப்பட்டதும் காரணங்களாகும். 12-தமிழ்க்கட்சிகளும், 28-சுயேட்சைக் குழுக்களும், 9-புதியக்கட்சிகளும் போட்டியிட்டு தமிழர் வாக்குகளைச் சிதறடித்து சிங்களக் கட்சிகளின் வெற்றிக்கு உதவியுள்ளன.
யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு இராசபட்சே வெற்றிப்பெற்றது மட்டுமல்ல. இலங்கையின் வல்லமைப்படைத்த சர்வதிகாரியாக உருவாகியுள்ளார். 2009-ஆம் ஆண்டு போரில் சிங்கள இராணுவத்தின் வெற்றி விழாவின் போது இராசபட்சே “இனி இலங்கையில் சிங்கள இனமும், சிங்கள கலப்பினமும் மட்டுமே இருக்கும்” எக்காளமிட்டார். அதாவது இனி தமிழினம் என ஒன்று தனியாக இலங்கையில் இருக்க அனுமதிக்கப்படமாட்டாது என்பதே இதன் பொருளாகும். நல்லவேளையாக அவரது ஆட்சி தொடரவில்லை அவருக்கு பின் பதவியேற்ற சிறீசேனா ஆட்சியிலும் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் இராசபட்சே அதிக வலிமையுடன் ஆட்சிக்கு வந்துள்ளார்.
தொடரும் தமிழர் துயரம்
2009-ஆம் ஆண்டு போரின் போதும் போர் முடிந்த பிறகும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டுப் போகப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? அவர்களின் பெயர்கள் என்ன? எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்? போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
சர்வதேசச் சட்டங்களை மீறி நச்சு குண்டுகளையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தி இலட்சக் கணக்கானத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவ வெறியர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியது. இந்தியா தலையிட்டு இலங்கை அரசே விசாரிக்கட்டும் எனக் கூறியதை ஐ.நா ஆணையம் ஏற்றது. ஆனால் அதன்படி இதுவரை எத்தகைய விசாரணையும் தொடங்க சிங்கள அரசு மறுத்தே வருகிறது.
தமிழர்கள் பகுதியில் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு இராணுவப் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளன. 2-இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவ வீரர்கள் தமிழர் பகுதியில் இன்னமும் குவிக்கப் பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமையாணையம் கூறியபடி தமிழர் பகுதியிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற சிங்கள அரசு மறுக்கிறது.
தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் திண்டாடுகின்றனர். விவசாயிகள் தங்களின் நிலங்களை விவசாயம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழர் கடற்கரையோரம் நெடுகிலும் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
போரின் விளைவாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் கணவன்மாரை இழந்துள்ளனர். தங்களின் குழந்தைகளைக் காப்பாற்றும் வழிதெரியாமல் திண்டாடும் அவர்களை சிங்கள இராணுவம் தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழர்கள் பலர் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த இயலாமல் தற்கொலை புரிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தமிழ்ப் பகுதியில் வறுமையும், பட்டினியும் தாண்டவமாடுகின்றன.
போரினால் பாதிக்கப்பட்டு தங்களின் வீடுகளை இழந்த தமிழர்களுக்காக இந்திய அரசு கட்டித் தந்த வீடுகளில் சிங்களர்கள் குடியேற்றப்படுகின்றனர். அதைத் தடுக்க இந்திய அரசு முன்வரவில்லை.
மீறப்பட்ட உடன்பாடு
எல்லாவற்றுக்கும் மேலாக 1987-ஆம் ஆண்டில் இந்தியாவும்-இலங்கையும் செய்து கொண்ட உடன்பாட்டிற்கிணங்க வட-கிழக்கு மாநிலத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட 13-ஆவது சட்டத்திருத்தம் பெயரளவில் இருக்கிறதே தவிர நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. இந்த சட்டத்திருத்தத்தை முற்றிலும் நீர்த்து போகச் செய்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் செயவர்த்தனா சின்னஞ் சிறிய இலங்கையை 9-மாநிலங்களாகப் பிரித்தார். தமிழர்களுக்கென்று ஒரு தனி மாநிலத்தை அமைக்க வேண்டும் என்பது தான் 13-ஆவது சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும். அந்த நோக்கத்தையே சிதறடிக்க 9-மாநிலங்களில் ஒன்றாக தமிழ் மாநிலம் பெயரளவுக்கு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் மிகப் பெருபான்மையினராக சிங்கள மக்கள் இருக்கிறார்கள். அந்நாட்டின் ஆட்சியே சிங்களர் கைவசம் உள்ளது. அவர்களுக்கென்று தனி மாநிலம் தேவையில்லை. தமிழர்களின் உரிமைகளைக் காப்பதற்காகத்தான் அவர்களுக்குக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதின் அடிப்படையையே செயவர்த்தனா சிதைத்தார். அதன்படி அமைக்கப்பட்ட மாநில அமைப்பிற்கு உரிய அதிகாரங்களை சிங்கள அரசு வழங்கவில்லை. இராசபட்சே ஆட்சிக்கு வந்தபோது இலங்கை உச்சநீதிமன்றத்தில் அவருடைய தூண்டுதலின் விளைவாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி கூறப்பட்ட 13-ஆவது சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டது. எனவே, இச்சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மாநில அமைப்புகள் செல்லாதவையாகும் என தொடுக்கப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 13-ஆவது சட்டத்திருத்தம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. இந்த உடன்பாட்டை செய்த இந்திய அரசு ஏன் என்று கேட்கவில்லை? இப்போதைய தலைமையமைச்சர் மோடி அவர்களும் இதை பற்றி கவலைக் கொள்ளவில்லை.
இராசபட்சே உள்பட சிங்கள தலைவர்கள் பலரும் மாநில அமைப்புகள் தேவையற்றவை என வாதாடுகிறார்கள். ஏற்கனவே வட-கிழக்கு மாநிலத்திலிருந்து கிழக்கு மாநிலம் தனியாகப் பிரிக்கபட்டாகிவிட்டது. இந்திய-இலங்கை உடன்பாட்டின் முதன்மையான குறிக்கோளே குழித்தோண்டிப் புதைக்கப்பட்டது. இதை தட்டிக்கேட்க அப்போதைய காங்கிரசு அரசும் இப்போதைய பா.ச.க அரசும் முன்வரவில்லை. அது குறித்து கவலைப்படவுமில்லை.
இந்தியாவிற்கு சிங்களர் எதிர்ப்பு
சீனாவுடன் நெருங்கி நட்புறவாடி இலங்கையின் தென்கோடியில் அம்பன் தொட்டா துறைமுகத்தை சீன உதவியுடன் அமைத்தும் இலங்கையில் பல திட்டங்களுக்கு சீனாவின் உதவியைப் பெற்றும் சீனாவுடன் இராணுவ ரீதியான உடன்பாடு செய்து கொண்டும் உள்ள இராசபட்சே மீண்டும் அதிக வலிமையுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் சீனாவுடன் மேலும் நெருக்கம் காட்டுவார் என்பதில் ஐயமில்லை. இதை தடுப்பதற்காக கடந்த காங்கிரசு ஆட்சி இராசபட்சேயைத் திருப்தி படுத்துவற்காக இராணுவ உதவி, பொருளாதார உதவி ஆகியவற்றை அள்ளி அள்ளிக் கொடுத்தது. ஆனாலும் சீன நட்பை முறிப்பதற்கு இராசபட்சே தயாராக இல்லை. ஈழத் தமிழர்களின் சார்பாக இந்தியா தலையிடாமல் தடுக்க வேண்டுமானால் இந்தியாவின் பகை நாடுகளான சீனா, பாகிசுதான் ஆகியவற்றின் நட்பை நாடுவதுதான் சிறந்த வழி என்பதை இராசபட்சே உணர்ந்து செயல்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
இந்தியாவைத் திருப்திபடுத்துவதற்காக கொழும்பு துறைமுகத்தின் சரக்கு பெட்டகக் கிழக்கு முனையத்தை அமைக்கும் பணியினையும் யாழ்ப்பாணத்திற்கு அருகே பலாலி விமானத்தளத்தை புதுப்பிக்கும் வேலையையும் காங்கேசன் துறைமுகத்தை விரிவாக்கும் பணியினையும் இந்தியாவுக்கு சிங்கள அரசு அளித்தது. ஆனால் மறுபக்கம் கொழும்பு துறைமுக சிங்களத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சிங்கள தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றைத் தூண்டிவிட்டு மேற்கண்ட ஒப்பந்தங்களை இந்தியாவுக்கு அளிக்க கூடாது எனப் போராட்டங்களையும் இராசபட்சே மறைமுகமாக நடத்தி வருகிறார்.
தெற்கே பேரபாயம்
வடக்கே லடாக் பகுதியில் பெருமளவில் எழுந்துள்ள சீன அபாயத்தை முறியடிக்கும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் தெற்கே இந்தியாவிற்குத் தோன்றியுள்ள பேரபாயத்தைக் கவனிக்க மறுக்கிறது. இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தொடர்ந்து சீனா திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
மியான்மர் நாட்டில் கயாவுபையு என்ற இடத்திலும் வங்காளத் தேசத்தில் சிட்டகாங்கிலும் பாகிசுதானில் வாடால் என்ற இடத்திலும் கொழும்புவில் அம்பன் தொட்டா மற்றும் கொழும்பு ஆகிய சரக்கு பெட்டக துறை முகங்களிலும் கடற்படை தளங்களை ஏற்கனவே சீனா அமைத்து விட்டது. இந்துமாக்கடலில் அதன் ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் இந்துமாக்கடல் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவதற்காக கொழும்பு, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பிரிட்டனின் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டன. இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு இந்த ஆதிக்கம் தொடர்ந்தது.
1983-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. 3000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். அப்போது இந்தியத் தலைமையமைச்சராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இலங்கை அரசை எச்சரித்து அக்கலவரத்தை நிறுத்தினார். அத்துடன் நிற்காமல் தனது சிறப்புத் தூதுவராக பார்த்தசாரதியை அனுப்பி தமிழர் தலைவர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தச் செய்தார். இந்தியாவின் இந்த அழுத்தத்தை செயவர்த்தனா விரும்பவில்லை. எனவே இந்தியாவை மிரட்டுவதற்காக திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தை அமைப்பதற்கான இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதை அறிந்த இந்திராகாந்தி கடும் கோபமடைந்தார். டெல்லியில் இந்துமாக்கடலோர நாடுகளின் மாநாட்டினைக் கூட்டி இந்துமாக்கடல் பகுதியில் எந்த வல்லரசுக்கும் இராணுவத்தளம் அமைக்க இடம் கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். அதன் பிறகு செயவர்த்தனா பதுங்கினார். அமெரிக்கா பின்வாங்கியது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் சீன ஆதிக்கத்தின் பிடிக்குள் சென்றுவிட்டன. இந்துமாக்கடல் பகுதி முழுமையாக சீனாவின் கட்டுபாட்டிற்குள் அடங்கி விட்டது. இந்தியாவின் தென்வாயிலில் சீன பேரபாயம் கதவைத் தட்டுகிறது.
லடாக் பகுதியில் உருவாகியுள்ள சீன அபாயத்தை விட தெற்கே இலங்கையில் உருவாகியுள்ள பேரபாயம் இந்தியாவின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் அத்தனைக்கும் ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது.
1962-ஆம் ஆண்டில் இந்திய எல்லையில் சீனப் படையெடுப்பு ஏற்பட்ட பிறகு அன்றைய தலைமையமைச்சர் நேரு அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஒரு முடிவினை மேற்கொண்டார். வடஎல்லையை சீனாவும், மேற்கு எல்லையில் பாகிசுதானும் இந்தியாவின் நிரந்தரமான எதிரிகள். போர் மூண்டால் வட இந்தியா பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும் எனவே, இராணுவ முதன்மை வாய்ந்த தொழிற்சாலைகளையும், தளங்களையும் தென்னிந்தியாவில் அமைக்குமாறு ஆணைப் பிறப்பித்தார். அதற்கிணங்க தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் சுமார் 700 இராணுவ அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. திபேத்திலிருந்து ஏவுகணைகள் மூலம் இவற்றை சீன தாக்குவதை விட இலங்கையிலிருந்து இவற்றைத் தாக்குவது எளிதானதாகும். இந்த பேரபாயத்தை கடந்த காங்கிரசு ஆட்சி உணர்ந்து செயல்படவில்லை. இப்போதைய பா.ச.க ஆட்சியும் உணரவில்லை.
தவறான கொள்கை
ஈழத் தமிழர்களைப் பலிகொடுத்தாவது சிங்கள அரசைத் திருப்திபடுத்த வேண்டும் என கடந்த காங்கிரசு ஆட்சி பின்பற்றிய கொள்கையையே இன்றைய பா.ச.க ஆட்சி தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. கடந்த காலத்திலும் இன்றும் சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதில் 50% சிங்கள இராணுவத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்திய அரசின் சார்பில் ஆயுத உதவியும் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
இலங்கைக்கு அருகே இந்தியாவைத் தவிர வேறொரு நாடு இல்லை. இந்தியா-இலங்கையின் நட்பு நாடு. அப்படியானால் யாருடன் போர் புரிவதற்கு சிங்களர்களுக்கு இத்தகைய இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கப்படுகின்றன? இந்த கேள்விக்குரிய விடை என்ன? ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கவே இந்தியாவும் அதன் பகை நாடுகளான சீனாவும் பாகிசுதானும் இந்த உதவிகளை இலங்கைக்குச் செய்கின்றன.
இந்தியாவின் இத்தகைய அணுகுமுறை ஒருபோதும் பயன்தராது. இலங்கை மேலும் மேலும் இந்தியாவின் பகைநாடுகளுடன் நெருங்கி உறவாடுமே தவிர இந்தியாவிற்காக அந்த நாடுகளைப் பகைத்துக் கொள்ளாது. தனது நாட்டில் ஊடுருவியிருக்கும் சீன ஆதிக்கத்தை அகற்றுவதற்கு இலங்கை முன்வரவே வராது.
அன்றும், இன்றும், என்றும் இந்தியாவை நட்பு நாடாகப் பார்ப்பவர்கள் ஈழத் தமிழர்களே. 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது சீன படையெடுத்த போது அப்படையெடுப்பை எதிர்த்து போராட ஈழத் தமிழர் தொண்டர் படையைத் திரட்டியவர் தமிழர் தந்தையான செல்வ நாயகம் அவர்களே ஆவார். ஆனால் இலங்கை அரசு அவர்கள் இந்தியா செல்வதற்குத் தடைவிதித்து விட்டது.
வங்காளத் தேசப் பிரச்சனையில் இந்தியா-பாகிசுதான் போர் மூண்டபோது இந்திய வானில் பறப்பதற்கு பாகிசுதான் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது இலங்கை வழியாக பாகிசுதான் இராணுவ விமானங்கள் செல்வதற்கும், கொழும்பில் இறங்கி எண்ணெய் நிரப்பிக் கொள்ளுவதற்கும் உதவி செய்த நாடு இலங்கையாகும்.
ஐ.நா-வின் சார்பில் சிங்கள அரசுக்கும்-விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதான பேச்சவார்த்தைகளில் ஈடுபட்ட நார்வேயின் பிரதிநிதியான எரிக் சோல்கெய்ம் அண்மையில் ஒரு திடுக்கிடும் உண்மையை டெய்லி மிரர் இதழுக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்டுள்ளார். “2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது பாகிசுதான் அரசு அளித்த இரகசிய ஆயுதங்களின் மூலமே சிங்கள இராணுவம் வெற்றிப்பெற முடிந்தது” என்று கூறியுள்ளார்.
பாகிசுதான் வசமுள்ள காசுமீர் பகுதியான லடாக் பகுதியை சீனாவுக்கு அளித்ததின் மூலம் அங்கு தளம் அமைத்த சீனப்படைகள் இந்திய லடாக் பகுதியின் மீது அண்மையில் தாக்குதலைத் தொடுத்தன. தற்போது மேலும் அந்த பகுதியில் தனது படைகளை சீனா குவித்து வருகிறது. எந்த நேரமும் பெரும்போர் மூளலாம். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தெற்கே இலங்கையில் பாகிசுதானுடனும், சீனாவுடனும் மிக நெருங்கிய நட்புறவுக் கொண்டிருக்கும் இராசபட்சே அரசு என்ன செய்யும்? என்பது மிகப் பெரிய கேள்வியாகும்?
மிக அதிகமான பெரும்பான்மையுடன் இராசபட்சே குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இந்த வேளையில் இந்தியாவின் தயவு அவருக்கு ஒருபோதும் தேவையில்லை. அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் சீனாவும், பாகிசுதானும் அளித்து வருகின்றன. மேலும் அளிப்பதற்கு தயாராகயிருக்கின்றன. இந்தியாவின் வடஎல்லையில் இமயத்தைக்கடந்து சீனாவினால் நமக்கு அபாயமும், நெருக்கடியும் மிகும் வேளையில் தெற்கே கடலின் மூலம் சீனாவும், பாகிசுதானும் பேரபாயத்தை உருவாக்கினால் இராசபட்சே அந்நாடுகளுடன் கைகோர்ப்பாரே தவிர இந்தியாவுக்கு ஆதரவாக ஒருபோதும் நிற்க மாட்டார். முன்பு குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் தோற்றபோது இந்தியாவின் மீது பழி சுமத்த அவர் தயங்கவில்லை என்பதை டெல்லியில் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தகைய வரலாற்று உண்மைகளையும் யார் உண்மையான நண்பன்? யார் எதிரி? என்பதையும் எண்ணிப் பாராமல் கடந்த காலத்திலும் தற்போதும் இந்திய அரசுகள் தொடர்ந்து தவறான கொள்கையையே கடைப்பிடிக்கின்றன. இந்த தவறான கொள்கையின் விளைவாகத்தான் சீனாவும், பாகிசுதானும் இலங்கையில் காலுன்றின. இதன் விளைவாக ஈழத் தமிழர்களுக்கு பேரழிவு ஏற்பட்டது.
இந்தியாவைப் பழிவாங்க நினைத்த அந்நாடுகள் சிங்கள அரசின் மூலம் தமிழரை அழித்தன. இந்த அழிவிலிருந்து மீளும் துணிவு ஈழத் தமிழர்களுக்கு உண்டு. கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நாட்டிடமிருந்தும் ஆயுத உதவியையோ வேறு உதவியையோ விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழரும் ஒருபோதும் நாடியதில்லை. ஆனால் சிங்கள அரசுகள் இந்தியாவுக்கு எதிராக ஒரு காலக்கட்டத்தில் மேற்கு நாடுகளுடன் சேர்ந்துக் கொள்ளவும் பின்னர் இந்தியாவின் பகைநாடுகளான பாகிசுதான், சீனா ஆகியவற்றுடன் கைகோர்க்கவும் ஒருபோதும் தயங்கவில்லை. எதிர்காலத்தில் அவ்வாறு தயங்கப் போவதுமில்லை தற்போதைய உலக நிலமையில் இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பெரும் வல்லரசாக விளங்கும்.
சீனாவின் துணை மட்டும் தனக்கு போதும் இந்தியாவின் துணை இனி தேவையில்லை என இராசபட்சே முடிவெடுத்தால் அதைத் தடுக்கும் வலிமை இந்தியாவுக்குண்டா? இந்த கேள்விக்குரிய சரியான விடையை இந்தியா அறிந்துள்ளதா?
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.