வெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்

நாடாளுமன்ற சனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…..

இந்திய நாடாளுமன்ற மேலவையில் அப்பட்டமான சனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாடாளுமன்ற மேலவையில் வேளாண்துறை சார்ந்த இரு சட்ட முன்வடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், இவ்விரு சட்டங்களையும், நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இக்கோரிக்கைகளை ஏற்பதற்கு மேலவையின் துணைத் தலைவர் மறுத்ததோடு, குரல் வாக்கெடுப்பின் மூலம் இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஏதேச்சதிகாரப் போக்கில் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென வலியுறுத்தியும்கூட அவர் அதை ஏற்க மறுத்தது, நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

அவையின் ஒரேயொரு உறுப்பினர் வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்று கேட்டாலும், வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற விதிமுறையையும், மரபுகளையும் அவைத் துணைத்தலைவர் மீறியுள்ளார்.

18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை ஏற்பதற்கும் அவைத் தலைவர் (வெங்கையா நாயுடு) மறுத்திருப்பது அப்பட்டமான விதிமுறை மீறலாகும்.

நாடாளுமன்ற சனநாயக மரபுகளும், விதிமுறைகளும் மீறப்படுவது தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது. சனநாயகத்தின் அடித்தளத்தையே இது தகர்த்துவிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response