ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த மு.க.ஸ்டாலின்

பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் பி.கனகசபாபதியை நியமித்த உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, உயர்கல்வியின் தரத்தைச் சீர்குலைத்து, கல்வியைக் காவிமயமாக்க பா.ஜ.க.,விற்கு அ.தி.மு.க. அரசு விரித்துள்ள சிவப்புக் கம்பள வரவேற்பிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான முனைவர் க.பொன்முடி.

இதுதொடர்பாக க.பொன்முடி விடுத்துள்ள அறிக்கையில், “பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதியை, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே அவர், “பா.ஜ.க.,வின் அறிவுசார் அணி”யின் துணைத் தலைவராகப் பணியாற்றிய போதுதான், இப்பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பு, தமிழக பா.ஜ.க.,வின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது, மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக – இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 3 சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், ‘வேந்தர்’ என்ற முறையில் தமிழக ஆளுநர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி, ‘பாரதியார் பல்கலைக்கழகச் சட்டம் – 1981’- ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், “கல்வி வல்லுநர்களை” சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிப்பதற்குத்தானே தவிர, பாரதீய ஜனதா கட்சியில் உள்ள துணைத் தலைவர் ஒருவரை நியமிக்க அல்ல!

அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க அந்த அதிகாரத்தை ஆளுநர் அவர்கள் பயன்படுத்தியிருப்பது, மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.

பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு, “புதிய தேசிய கல்விக் கொள்கை” விவாதத்தில் ஒருபுறம் பங்கேற்றுக் கொண்டு – இன்னொரு பக்கம், பா.ஜ.க.,வில் அங்கம் வகிக்கும் நிர்வாகி ஒருவரை பல்கலைக்கழகத்திற்கு நியமிப்பது, எந்த வகையில் நியாயம்?

பல்கலைக்கழகக் கல்வியை காவிமயமாக்க – ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க, அரசியல் சட்டப் பதவியில் அமர்ந்துள்ள ஆளுநர் அவர்கள் இறங்கி வந்திருப்பது ஏன்? இந்த நடவடிக்கை; சட்டம், வேந்தருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் – சட்டமன்ற ஜனநாயகம், ஆளுநர் மீது வைத்த நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

சிண்டிகேட் உறுப்பினரை நியமிக்க அதிகாரம் அளித்துள்ள அதே சட்டத்தில் உள்ள பிரிவு 10(2)ல், “இதுபோன்ற நியமனங்களைச் செய்யும் முன்பு, துணைவேந்தருடன் கலந்து ஆலோசித்து வேந்தர் நியமிக்க வேண்டும்” – என்று தெளிவாக இருக்கின்றபோது, பா.ஜ.க.,வில் உள்ள துணைத் தலைவர் ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க, துணைவேந்தர் எப்படிப் பரிந்துரை செய்தார்? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எப்படி இதை அனுமதித்து வேடிக்கை பார்த்தார்?

பல்கலைக்கழகங்களில் நாங்கள் ஊழல் செய்து கொள்கிறோம். பா.ஜ.க.,வினரை நீங்கள், சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளுங்கள்” என்ற ரகசிய ஒப்பந்தம், பா.ஜ.க.,விற்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

உயர்கல்வியின் தரத்தைச் சீர்குலைத்து – கல்வியைக் காவிமயமாக்க பா.ஜ.க.,விற்கு அ.தி.மு.க அரசு விரித்துள்ள இந்தச் சிவப்புக் கம்பள வரவேற்பிற்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக கனகசபாபதியை நியமித்த உத்தரவை, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திரும்பப் பெற வேண்டும். அப்படியில்லையென்றால், உயர்கல்வித் துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ, ஆளுநருக்கு அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து, பா.ஜ.க. துணைத் தலைவரை, பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு க.பொன்முடி கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை திமுக சார்பில் க.பொன்முடியை வெளீயிட வைத்ததன் மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அவை என்னென்ன?

கல்வியைக் காவி மயமாக்குவதற்கு வலுச்சேர்க்கும் விதமாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாஜக அரசு செய்திருக்கும் அத்துமீறலை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அதோடு, அண்மைக்காலமாக திமுகவில் தன்னைப் புறக்கணிப்பதால் பாஜகவுக்குப் போகப்போகிறார் பொன்முடி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிற்குச் சரியான பதிலடியாக பாஜகவின் சதியை பொன்முடியை விட்டே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இவற்றைத்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்று சொல்கிறார்கள்.

Leave a Response