தமிழக இளையோர் மீது மோடி அரசு வீசியுள்ள புதிய குண்டு – பெ.மணியரசன் எச்சரிக்கை

வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…..

பொழுது விடிந்தால் புதிய குண்டு ஒன்றை மக்கள் உரிமைகளின் மீது வீசுவது மோடி அரசின் கொரோனாக் காலக் கொள்கையாகிவிட்டது. அவ்வாறு நேற்று (19.08.2020) புதிய சுமையாக – வேலைக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது.

முதற்கட்டமாகத் தொடர்வண்டித் துறை, வங்கித் துறை, நடுவண் அரசின் பணியாளர் தேர்வுத் துறை ஆகிய மூன்றுக்குமான ஊழியர் வேலைக்கு இந்திய அரசு அனைத்திந்திய முதல்நிலைத் தேர்வு முறையை அறிவித்துள்ளது.

“தேசியப் பணிசேர்ப்பு முகமை (NRA)” என்ற இந்த அமைப்பு மேற்கண்ட மூன்று துறைகளில் வேலைக்குச் சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு நடத்தும். இதில் வெற்றி பெறுவோர் மட்டுமே மேற்படி மூன்று துறைகளும் தனித்தனியே நடத்தும் பணியாளர் வேலைக்கான தேர்வுகளை எழுத முடியும். இந்த இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுவர்.

இந்த முதல்நிலைத் தேர்வு, இந்திய அரசின் எல்லாத்துறைகளின் பணி சேர்ப்பிற்கும் மாநில அரசுகளின் பணி சேர்ப்பிற்கும் தனியார் துறைப் பணிகளுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படும் என்றும் மோடி அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முதல்நிலைத் தேர்வில் முதலில் தோல்வியுறுவோர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் திரும்பத் திரும்ப எழுதலாம் என்கிறது இதன் விதிமுறை!

ஒரு வேலைக்கு ஒரு தடவை தேர்வெழுதிய மாணவர்களை – இப்போது இரு தடவை தேர்வெழுதும்படி செய்துள்ளது மோடி அரசு! ஆனால், தேர்வை எளிமைப்படுத்தி, மாணவர்களுககு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளது என்று நடுவண் அமைச்சர் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேர்காணல் கொடுத்தார். இட்லரின் கோயபல்சு நினைவுக்கு வருகிறார்.

கூடுதலாகச் சுமத்தப்பட்டுள்ள இந்தப் புதிய அனைத்திந்தியத் தேர்வு, ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – கிராமப்புற மாணவர்களை வடிகட்டிக் கழித்துக்கட்டுவதற்கான ஏற்பாடு என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்!

இந்த புதிய அனைத்திந்திய நுழைவுத் தேர்வு இந்திய அரசின் நடுவண் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் என்.சி.இ.ஆர்.ட்டி. (NCERT) பாடத் திட்ட அடிப்படையில் நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த வினாத்தாள்கள் இவர்களின் பாட வரம்புக்கு வெளியே உள்ளவையாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் இந்த வழியிலும் உண்டு.

இப்போது, இந்திய அரசு நிறுவனங்கள் நடத்துகின்ற வேலைக்கான அனைத்திந்தியத் தேர்வுகளில் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் எந்த அளவு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும், இந்திக்காரர்களும் மற்ற வெளி மாநிலத்தவர்களும் இத்தேர்வுகளில் சற்றொப்ப 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்வு செய்யப்படுவதையும் ஏற்கெனவே நாமறிவோம்.

புதிய அனைத்திந்திய முதல்நிலை நுழைவுத் தேர்வு வந்துவிட்டால், அந்தந்தத் துறைகள் நடத்தும் தேர்வெழுதும் தகுதியைக் கூடத் தமிழர்கள் பெற முடியாமல் வடிகட்டப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

அடுத்து, மேற்படி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டுத் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளுக்கான தேர்வெழுதத் தாராளமாக வருவார்கள்! தமிழ்நாட்டின் மாநில அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளும் வடவர்களுக்கே அளிக்கப்படும். தமிழ்நாட்டின் இளையோர் அகதிகளாக அலையும் அவலம் உருவாகும்!

தமிழ்நாட்டு இளையோர்க்கு வேலை மற்றும் மேல்படிப்பு படிக்க வாய்ப்புளைப் பறிப்பது மட்டுமின்றி, அவர்களின் உயிரையும் பறிக்கும் அவலம் ஏற்கெனவே அனைத்திந்திய “நீட்” தேர்வால் நடந்து கொண்டுள்ளது. அண்மையில் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி “நீட்” தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது அபாய எச்சரிக்கை!

ஒவ்வொரு உரிமைப் பறிப்பிற்கும் தனித்தனியே கண்டனம் தெரிவித்து, அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தி ஓய்ந்து போவதில் பயன் இல்லை. ஒட்டுமொத்தமாக மோடி அரசு, நமது அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, மக்கள் குறிப்பாக இளையோர் ஒன்று திரள வேண்டும். மண்ணின் மக்கள் உரிமை மீட்பிற்கான மாபெரும் மக்கள் திரள் அறப்போர் எழுச்சிக்கு அனைவரும் அணியமாக வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response