விநாயகர் சதுர்த்தி அரசியல் – விளக்கும் சுபவீரபாண்டியன்

விநாயகர் சதுர்த்தி விழாவை வழக்கம் போல் நடத்த அனுமதி தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பாஜக தலைவர், இந்து முன்னணித் தலைவர் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். தடை விதிக்கப்பட்டாலும் அதனை மீறி 1.5 லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவியே தீருவோம். என்று மிரட்டலும் விடப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் கடவுள் பக்திதான் காரணமா?

அப்படியானால் சித்திரைத் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டபோதும், கள்ளழகர் ஆற்றில் இறங்காத போதும் இவ்வளவு விவாதங்கள் வெளிவரவில்லையே, ஏன்? இவ்வாண்டு வள்ளியாண்டவன் கோயிலில் வைகாசி விசாக விழா நடக்கவில்லை, ஐயனார் சாமிக்கு யாரும் பொங்கல் இடவில்லை, அம்பாளுக்கு ஆனித் திருமஞ்சனமும் நடக்கவில்லை, திருவில்லிபுத்தூரில் ஆடித்தேர் ஓடவில்லை இவை எதற்காகவும் பாஜகவும், இந்து முன்னணியும் பொங்கி எழவுமில்லை. கருப்பசாமி, சுடலைமாடன் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்களுக்காக எங்கும் விழா நடக்கவில்லை. கடா வெட்டி, எந்தப் பூசையும் எந்த சாமிக்கும் இவ்வாண்டில் நடைபெறவில்லை. எல்லாவற்றுக்கும் கொரோனாதான் காரணம். எனவே இங்கு ஓர் அமைதி நிலவியது.

இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மட்டும் அந்த அமைதியைக் குலைக்க முயல்வதற்கு அடிநாதமாக இருப்பது ஆன்மீகமா, அரசியலா?

கடந்த 30 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் மரபைக் கைவிடுவது எப்படி என்று கேட்கின்றனர். கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளழகர் ஆற்றில் இறங்கினார், இவ்வாண்டு இறங்கவில்லையே! அதை மட்டும் ஏற்றுக் கொண்டதும், இப்போது பொங்கி எழுவதும் எதற்காக? இதில் உள்ளடங்கி இருப்பது ஆன்மீகமா, அரசியலா?

பக்தி என்பது பலவகையானது. தெய்வபக்தி, தேசபக்தி, குருபக்தி, பதிபக்தி, என்றும், இன்னும் பலவாறாகவும் நம் பக்தியைப் பற்றிக் கூறுவர். எல்லா பக்தியும் இறுதியில் இறைபக்தியில்தான் போய் முடியும். கணவனை, ஆசிரியரை, தேசத்தைக் கடவுளாகப் பார்க்கும் பார்வைக்கே இந்த பக்தி என்னும் சொல் வழிவகுக்கிறது. பக்தி வந்துவிட்டால் பிறகு புத்தி கொண்டு கேள்வி கேட்க முடியாது அல்லது கூடாது. அந்த நிலைக்கு மக்களைக் கொண்டு வந்துவிட்டால், பக்தியின் பெயரால் எல்லாவற்றையும் மக்களின் மூளைக்குள் திணித்துவிட முடியும்.
பக்திக்குள்ளும் விநாயகர் பக்தி விசேடமானது. பாலகங்காதரத் திலகர், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடக்கி வைத்த அந்த அரசியல் கலந்த பக்தி, 1980க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள்ளும் அடியெடுத்து வைத்தது. தெருக்கள் தோறும் விநாயகர் சிலை, எல்லா இடங்களிலும் காவிக்கொடி, பரவசம் மிகுந்த பக்திப் பாடல்கள், ஒரு வாரத்திற்குப் பின்பு அங்கங்கே ஊர்வலங்கள் – என்று விநாயகரின் பெயரால் பாஜகவின் அரசியல் களைகட்டும். அதற்கு இந்த ஆண்டு தடை ஏற்பட்டு விட்டதே என்னும் அரசியல் கவலை தவிர, இதற்குள் ஆன்மீகக் கவலை எதுவும் இல்லை.

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடக் கூடாது என்று எந்த தடையும் இல்லை. அப்படித் தடை விதிப்பது ஜனநாயகமும் இல்லை. அவரவர் வீட்டில் கொண்டாடுங்கள் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வீடுகளில் அப்படிக் கொண்டாடப்பட்ட விழாதானே அது! அதனால் அந்த பழையப் மரபை இந்த ஆண்டு தொடருங்கள் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆன்மீகம் மட்டுமே நோக்கமாக இருக்குமானால், முதலமைச்சரும், நீதிமன்றமும் சொல்லியுள்ள கருத்துகளை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது. ஆனால் பள்ளிவாசல்கள் இருக்கும் தெருக்களில் ஊர்வலம் நடத்த இந்த ஆண்டு வழியில்லாமல் போய்விடும். எந்த இடத்திலும் இதன் அடிப்படையில் ஒரு கலவரம் வந்துவிடாது. அதுதான் நம் காவி நண்பர்களின் கவலை.

அரசியல் கட்சிகள் ஆள்சேர்ப்பது என்பது இயற்கைதான். அதற்காகக் கூட்டங்கள் நடத்துவதும், பேரணிகள் நடத்துவதும் தேவையானவையாக இருக்கின்றன. ஆன்மீகத்திற்கு எதற்காகக் கூட்டமும், ஊர்வலமும்? மக்களின் ஆன்மீக உணர்வை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இத்தனை ஆர்ப்பாட்டங்கள் என்பது எல்லோருக்கும் புரிகிறது.

ஒரு குறிப்பிட்ட விழா, குறிப்பிட்ட கடவுள், குறிப்பிட்ட மொழி ஆகியனவற்றிற்கு மட்டும் இங்கே கூடுதல் முதன்மை கொடுக்கப்படுவதைக் கவனித்தால் அதன் உள் அரசியல் எல்லோருக்கும் விளங்கிவிடும். எந்த விழா, எந்தக் கடவுள், எந்த மொழி பார்ப்பனர்களுக்கு பயன்தருகிறதோ அவற்றிற்கு மட்டுமே இங்கு ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவர்கள் வணங்காத நாட்டுப்புறத் தெய்வங்களை, அவர்கள் பெரிதுபடுத்தி மக்களிடம் கொண்டு செல்வதில்லை. எந்த வழிபாடு அவர்களுக்குப் பயன்தருமோ அதற்கு மட்டுமே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்.

அப்படித்தான் மொழிகளிலும் சமஸ்கிருதத்திற்கு மட்டும் தனி இடம் தருவார்கள். இந்திக்குக் கூட இரண்டாம் இடம்தான். காரணம், சமஸ்கிருதமே தங்கள் தாய்மொழி என்று பார்ப்பனர்கள் கருதுவதுதான். அண்மையில் தொலைக்காட்சியிலும், வலையொளியிலும், சில புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டினேன். அவை அரசு தந்த புள்ளி விவரங்கள்தான்.

இந்தியாவில் மிகமிகக் குறைவான மக்களால் பேசப்படும் சமஸ்கிருத மொழிக்கு, மிகமிகக் கூடுதலாகக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆங்கிலேயர் காலத்திலேயே 1871ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பனாரஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் தொடங்கி, 2018-இல் அரியானாவில் நிறுவப்பட்ட சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் வரையில் மொத்தம் அந்த மொழிக்காக மட்டும் 18 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றுள் மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்கள். பூனாவில் இருப்பது நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றவை மாநில அரசுளின் கீழ் இருப்பவை.

தென்னிந்தியாவில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 1993ஆம் ஆண்டு காலடியிலும்(கேரளா), 2006ஆம் ஆண்டு திருப்பதியிலும்(ஆந்திரா), 2011ஆம் ஆண்டு பெங்களூருவிலும்(கர்நாடகா) பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் அப்படி ஒரு நிறுவனம் வரவில்லையே என்கிற ஆதங்கம் பார்ப்பனர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. பல்கலைக்கழகங்களைத் தாண்டி, கல்லூரிகள், பள்ளிகள் என்று பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

இவற்றின் மூலம் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேலாகச் செலவழிக்கிறது. துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று நிதியாண்டுகளில் மட்டும், சமஸ்கிருத வளர்ச்சிக்காக 643.84 கோடி ரூபாயை மத்திய அரசு அள்ளிக் கொடுத்திருக்கிறது. காரணம் கேட்டால் சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்றும், செம்மொழி என்றும் சொல்லப்படுகிறது.

மற்ற செம்மொழிகளுக்கும் அவ்வாறு மத்திய அரசு செலவு செய்கிறதா என்று கேட்டால், விடையோ வேதனை தருவதாக இருக்கிறது. அதே கடந்த மூன்று நிதியாண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குமாகச் சேர்த்து மத்திய அரசு செலவிட்டிருப்பது வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே. இது ஒரு ஜனநாயக நாடா என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்தியாவில் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 0.002 விழுக்காடு மட்டுமே. மக்களால் பேசப்படாத அரசாங்கத்திற்கு வரி வருமானத்திற்கு உதவாத ஒரு மொழிக்கு இவ்வளவு கோடி ரூபாயைச் செலவழிப்பதும், பலகோடி மக்களால் பேசப்படும், அரசின் வரி வருமானத்திற்கு பேரளவு உதவி செய்வதுமான மொழிகளுக்கு மிகக் குறைவாகப் பணம் ஒதுக்குவதும் எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இந்த நாடு எப்போது உணரப் போகிறது?

சமஸ்கிருதம் கடவுளுக்கு நெருக்கமான மொழி என்று கூறுவதும், விநாயகர் சதுர்த்தி மக்களுக்கு நெருக்கமான விழா என்று கூறுவதும் ஆன்மீகம் இல்லை, அரசியல்! இரண்டினாலும் தாங்கள் பயன்பெற முடியும் என்று கருதும் பார்ப்பனர்களின் எண்ணமே, இங்கு அரசியலை உள்ளடக்கமாகக் கொண்ட ஆன்மீகம்.

விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் அமைதியாக கொண்டாடும் இந்து மக்களே, ஆன்மீகத்தின் பெயரால் அரசியலில் தங்களை வளர்த்துக் கொள்ள முயலும் பார்ப்பனர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

– சுப.வீரபாண்டியன்

Leave a Response