விநாயகர் சிலை குறித்து சான்றுடன் புகார் கொடுங்கள் – கொளத்தூர் மணி அறிக்கை

தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் தடையை மீறும் இந்து முன்னணியைத்
தடுத்து நிறுத்தவேண்டுமென திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

அன்புத் தோழர்களுக்கு வணக்கம், நம் முன் உள்ள ஒரு உடனடிக் கடமையினை சுட்டிக்காட்டவே இந்த அறிக்கையை எழுதலானேன்.

கடந்த 13.08.2020 அன்று அரசின் செய்தி வெளியீடு 583 இன் வழியாக நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டும், தடுப்பு நடவடிக்கையாய் அமலில் உள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியும் 22.08.2020 சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்வையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையோ, விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்துவதையோ, நீர்நிலைகளில் கரைப்பதையோ அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, வீடுகளிலேயே இந்நிகழ்வினை நிகழ்த்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சமூக அக்கறையோடு அறிவித்திருந்தது.

ஆனால் அறிவிப்பு வந்தவுடன் அதற்கு எதிர்வினையாக இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர் “நாங்கள் தடை ஆணையை மீறி ஒன்றரை இலட்சம் சிலைகளை நிறுவுவோம்; விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்துவோம்; பொது நீர்நிலைகளில் கரைப்போம்” என்ற அறிவிப்பை ஊடகங்களுக்கு அளித்திருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இதனை ஒட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகள் மும்முரமாய் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நம்முடைய கவனத்திற்கு வந்திருக்கிறது. அவையும் ஏற்கனவே உள்ள விதிகளுக்கு எதிராக இரசாயன பொருள்களைக் கொண்டும், அரசின் அனுமதித்த அளவுக்கும் உயரமாகவும் துணிச்சலாகச் செய்து குவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இது அரசின் பேரிடர்த்தொற்று தொடர்பான விதிகளை மீறும் ஆணவம் மிக்க செயல் என்பதோடு, தொடர்பு ஏதும் இல்லாத அப்பாவி பொதுமக்களையும் நோய்த்தொற்றால் பாதிக்கச் செய்யும் ஆபத்தான செயல் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இதனைக் கருத்தில் கொண்டு, வருமுன் காப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில், உற்பத்தி நிலையிலேயே இந்த சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதே நல்லது என்று நாம் கருதுகிறோம்.

எனவே கழகத் தோழர்களும், சமூக அக்கறையுள்ள நண்பர்களும் இவ்வாறான சட்டமீறல் சிலை உற்பத்திகளைப் பற்றி அறிய வந்தால், உடனடியாக அந்தப் பகுதி காவல் நிலையத்திற்கும், அதையும்விட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், மாநகர காவல்துறை ஆணையாளர்களுக்கும் புகார்மனுவினை அளிக்க வேண்டும்; முடிந்தவரை புகைப்படங்கள் கிடைத்தால் அவற்றோடு மனுவை அளித்திடல் வேண்டும் என்ற கோரிக்கையினை அன்புடன் முன்வைக்கிறேன்.

மனுக்களை நேரில் அளித்திடினும், தவறாமல் அதன் படி ஒன்றினை ஒப்புகையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பி ஒப்புகைச் சீட்டை பெற்று வைத்துக்கொள்வதும் நல்லது.

உடனடியாய் செயலில் இறங்க வேண்டியதும், அதன் வழியாக அப்பாவிப் பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

Leave a Response