ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவரைக் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ஆம் தேதி இரவில் அவரது கிராமமான பிக்ருவுக்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து காவல்துறையினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.

இந்த பரபரப்பு சம்பவத்தில் துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.

இதில் உடனடியாக துபேயின் 2 கூட்டாளிகள் 3 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்போல அவனது வலது கரமாக விளங்கிய தயாசங்கர், காவல்துறை வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த காவல்துறையினர் என பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் வைத்து நேற்று அந்த மாநில காவல்துறையினர் விகாஸ் துபேயை கைது செய்தனர். அங்குள்ள புகழ்பெற்ற மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் விகாஸ் துபேயை பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டார். கான்பூருக்கு காரில் அழைத்து வந்த போது, பாதுகாப்புப் பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தைப் பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவல்துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வால் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகவும் அவமானமும் ஆத்திரமும் அடைந்ததாகவும் சம்பந்தப்பட்டவர்களை உடனே கொல்ல வேண்டும் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே விகாஸ்துபே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்விரண்டு தகவல்களில் எது சரி? என்பது இன்னும் சில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

Leave a Response