இன்று கங்கண சூரிய கிரகணம் – இப்படி அழைக்கப்படுவது குறித்து விளக்கம்

கங்கண சூரியகிரகணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்கிறது.சூரியகிரகணம் இன்று காலை 10.22 மணிக்கு தொடங்கி பகல் 1.41 மணிக்கு நிறைவடைகிறது.

இதுகுறித்து சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க இயக்குநர் சவுந்திர ராஜபெருமாள் கூறியதாவது….

சந்திரன் சூரியனைவிட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது. இதனால் தான் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கிறது.

வெகு தொலைவில் நிலவு இருக்கும் போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம்(வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின் போது வெளித்தெரியும் எனவே இதனை கங்கண சூரியகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் தெரியும், குறிப்பாக ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட் பகுதியில் தெரியும்.

கிரகணத்தின் பாதை மத்திய ஆப்பிரிக்காவில் தொடங்கி, பசிபிக் பெருங்கடலில் முடிவடைவதற்கு முன்பு சவுதி அரேபியா, வட இந்தியா மற்றும் தெற்கு சீனா வழியாக பயணிக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் ஒரு பகுதி கிரகணம் தெரியும்.

வட இந்திய நகரங்களான டெல்லி, சாமோலி, டேராடூன், ஜோஷிமத், குருசேத்திரா, சிர்சா, சூரத்கல் போன்ற இடங்களில் தெரியும். தமிழகத்தை பொருத்தவரையில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் பகுதி மட்டுமே தெரியும்.

சென்னையில் இன்று காலை 10.22 மணிக்கு தொடங்கி பகல் 1.41 மணிக்கு நிறைவடைகிறது. அதிக பட்ச கிரகணம் பகல் 11.58 மணிக்கு இருக்கும்.

வெறும் கண்ணால் சூரியனை நேரடியாக யாரும் பார்க்கக் கூடாது. சூரியனை நேரடியாகப் பார்ப்பதால் கண்பார்வை இழப்பு ஏற்படும்.

சூரியகிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்ப்பதற்காகத் தனியாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். அல்லது வெல்டிங்க கடைகளில் பயன்படுத்தப்படும் வெல்டரின் கண்ணாடி வழியாக மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பார்க்கலாம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த முறை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

Leave a Response