அற்புதம் அம்மாளின் போராட்டத்தில் துணைநிற்போம் – அதிரும் மக்கள் குரல்

இராஜீவ் காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் இருக்கிறார்கள்.இன்று 30 ஆவது ஆண்டு தொடங்குகிறது. அவர்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி 161 ஆவது சட்டப்பிரிவின்படி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாகின்றன.

ஆனாலும் அதற்கு ஒப்புதல் தராது காலந்தாழ்த்தி வருகிறார் தமிழக ஆளுநர். அவருடைய இச்செயலை அதிமுக பாஜக தவிர ஏனைய கட்சிகள் எல்லாம் கண்டித்துவிட்டன. ஆனாலும் ஆளுநர் அசையவில்லை. தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் ஏழு தமிழரை விடுதலை செய்யுங்கள் என்கிற குரல்கள் வேகமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.எழுவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவின் முப்பதாண்டுப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூன் 11,2020) #StandWithArputhamAmmal என்கிற குறிச்சொல்லை உருவாக்கி,பேரறிவாளன் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று 30 ஆண்டுகள் ஆகின்றன.வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரியே கூறிவிட்ட பின்னும் விடுதலை செய்யவில்லை.எனவே அற்புதம் அம்மாவின் போராட்டத்துக்குத் துணை நிற்போம் என்று அறிவித்து, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யுங்கள் என்கிற கோரிக்கை சமூகவலைதளம் மூலமாகவே பரவியது.

நோயுற்ற 78 வயது தந்தையை உடனிருந்து கவனிக்க,ஒரே மகனாக பெற்றோரின் இறுதி நாட்களிலாவது உடனிருந்து கவனிக்க பேரறிவாளனை விடுதலை செய்யக் கோருவோம் என்று தார்மீக அடிப்படையிலும்,

பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலத்தை, தான் முழுமையாகப் பதிவு செய்யவில்லை. அவர் நிரபராதி எனச்சொல்லி தியாகராஜன் ஐபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்த பிறகும் விடுதலையை மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என்று சட்டப்படியும் பேரறிவாளன் விடுதலைக்குக் குரல்கொடுத்து வருகிறார்கள்.

இது இந்திய அளவில் பெரிதாகி வருகிறது.

கட்சிகள் இல்லாமல் வெகுமக்களே களமிறங்கி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என சமுதாய ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.வெகுமக்களின் குரல்கள் அரசின் செவியை எட்டுமா?

Leave a Response