பாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கொரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவின.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர், மே முதல்வாரத்தில் அவரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில், மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்
கீழும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் அவரின் தந்தை கலியபெருமாள் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தனது மருத்துவம் பாரம்பரிய மருத்துவம் என்றும் கடலூர் வருவாய்த்துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே தான் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனின் சிகிச்சையால் யாருக்கும் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், தனது மகன் கூறிய கருத்துகளைக் காவல்துறை தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே குண்டர் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும், எனது மகனை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் குண்டர் சட்டத்தில் அடைக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகளை விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தணிகாசலத்துக்கு ஆதரவாகப் பாமக களமிறங்கியுள்ளது.

பாரம்பரிய மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது மிகப்பெரிய அநியாயம். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு முகநூல் நேரலையில் கருத்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் இருந்து அவரை மீட்கும் சட்டப்போராட்டத்தை பாமக வழக்குரைஞர் பாலு மேற்கொண்டுள்ளார்.

Leave a Response