வெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் படையெடுத்துள்ள கோடிக்கணக்கான வெட்டுக் கிளிகள் மேலும் 12 மாநிலங்களுக்குள் புகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது இந்த வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் உள்ள விளை நிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றை விரட்டும் பணியில் 89 தீயணைப்புப் படைகளோடு 120 கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனங்கள் கூடிய 47 கட்டுப்பாட்டு வாகனங்கள், 810 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிழக்கு பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் உட்பட இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் அபாயம் என்று, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து அரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக வடமாநிலங்களுக்குள் புகுந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குள் புகுந்துள்ளது.

அடுத்த கட்டமாக கிழக்கு நோக்கிப் பயணித்து வரும் வெட்டுக்கிளிகள் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களை நோக்கிப் பறந்து கொண்டு இருக்கின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீட்டர் வரை பயணம் செய்கின்றன.இந்த வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களில் கர்நாடகா வரை பரவும் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு கணித்துள்ளது. மொத்தமாக இந்தியாவில் மட்டும் 17 மாநிலங்களில் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்படும் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் எனப்படும் இவை ஜூன் 15 ஆம் தேதி வாக்கில் கர்நாடகா, தெலங்கானா, உத்தரகாண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் படையெடுக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தலைநகர் டெல்லியைச் சூழ்ந்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Response