அமித்ஷா பற்றி காட்டுத்தீ போல பரவிய வதந்தி பற்றி அவரே சொன்ன விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா சிக்கல் வந்த பிறகு எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. பல மத்திய அமைச்சர்கள் பேட்டி கொடுத்த போதும் இவர் பேட்டி எதுவும் கொடுக்காமல் இருந்தார்.

இதனால், அமித்ஷா கடும் உடல்நலக் குறைவில் இருக்கிறார் என்று தகவல் பரவியது. இந்நிலையில் சிலர், தனக்கு பயங்கரமான நோய் தாக்கி இருப்பதாகக் கூறி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் அவரே ஒரு பதிவு வெளியிட்டதுபோல போலியாக ‘ஸ்கிரீன் ஷாட்’ தயாரித்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர்.

இந்தத் தகவல், காட்டுத்தீ போலப் பரவியது. ‘ஸ்கிரீன் ஷாட்’ என்பதால் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட தகவல்தான் என அந்த போலியான தகவலைப் பலரும் உண்மை என நம்பி விட்டனர். இது பாரதீய சனதாக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி விட்டது.

இதுகுறித்து அமித்ஷா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது……

கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘ட்விட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர்.

இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற வகையில், நான் இரவு நீண்ட நேரம் வரையிலும், எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், இதில் கவனம் செலுத்தவில்லை.

இது என் கவனத்துக்கு வந்தபோது, இப்படி வெளியிட்டவர்கள் வேண்டுமானால் தங்கள் கற்பனை இன்பத்தை அனுபவிக்கட்டும் என அனுமதிக்க நினைத்தேன். அதன் காரணமாக நான் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் எனது கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்களும், என் நலம் விரும்பிகளும் கடந்த 2 நாட்களாக தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர். எனவே இன்று நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்தவொரு நோயும் இல்லை.

இந்து மத நம்பிக்கைகள்படி, இத்தகைய வதந்திகள் ஒரு நபரை ஆரோக்கியம் ஆக்குகின்றன. எனவே இந்த வதந்திகளைப் பரப்பியவர்கள் இதை ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் சொந்த வேலையை மனதில் கொள்வார்கள், என்னையும் என் வேலையைச் செய்ய விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

என் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, விசாரித்த கட்சி தொண்டர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கும நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மீது எனக்கு எந்த தவறான உணர்வுகளும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அமித்ஷா கூறி உள்ளார்.

இதற்கிடையே அமித்ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவலைப் பரப்பியதாக ஆமதாபாத் காவல்துறையினர் நேற்று 4 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஆமதாபாத்திலும், பாவ் நகரிலும் பிடிபட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஆமதாபாத் காவல்துறை சிறப்பு கமிஷனர் (குற்றப்பிரிவு) அஜய் டோமர் தெரிவித்தார்.

அவர்கள் மீது தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Response