
காவிரி ஆணையத்தின் தன்னாட்சியைப் பறிப்பதைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் வீட்டுவாயில் முன் அறப்போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்பேரில் நேற்று அப்போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. அது குறித்த செய்திக்குறிப்பு…..
காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் கீழ், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட ஓர் அலுவலகமாக மாற்றி – நடுவண் அமைச்சரவை கடந்த 27.04.2020 அன்று அரசிதழ் வெளியிட்டது.
ஏற்கெனவே, மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஊனப்படுத்தும் நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ந்து எடுத்து வந்தது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி ஆணையத்திற்கு முழுநேரப் பணியும், தனிப் பொறுப்பும் உள்ள தலைவர் ஒருவரை அமர்த்தி இருக்க வேண்டும். அதேபோல் காவிரி ஆணையத்திற்கும், ஒழுங்காற்றுக் குழுவிற்கும் முழுநேர அதிகாரிகளை அமர்த்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், வேறு பணிகளில் முழுநேர அதிகாரிகளாக இருப்போரை ஆணையத்தின் தலைவர் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் பதவிகளுக்கு இந்திய அரசு அமர்த்தியுள்ளது.
இப்பொழுது மேலாண்மை ஆணையத்தைத் தனி அலுவலகமாக ஆக்காமல், இந்திய அரசின் நீராற்றல் துறையில் சேர்த்துள்ளது. இதைக் கண்டித்தும், முழுநேரத் தலைவரையும், தனி அலுவலகத்தையும் கொண்ட தன்னாட்சியுள்ள காவிரி ஆணையமாக அதை செயல்படுத்த வலியுறுத்தியும், 07.05.2020 அன்று – காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அவரவர் வீட்டில் வாசல் முன்பாக கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கருப்புக் கொடி ஏந்தியும், கோரிக்கைப் பதாகை ஏந்தியும் மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை அறப்போராட்டம் நடத்தினார்கள்.
தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், கலைஞர் நகரில் அவர் வீட்டின் முன்பாக கண்டன அறப்போராட்டம் நடந்தது. வரிசையாக உள்ள பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து அவர்கள் வீடுகளில் வாசல்களில் நின்று, கறுப்புக் கொடியும், கோரிக்கைப் பதாகையும் ஏந்தி ஆண்கள் – பெண்கள் – சிறுவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூர் மாவட்டம் – பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தோப்புத்துறையில் மனிதநேய சனநாயகக் கட்சிப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி, சிதம்பரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், சென்னையில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், நாகர்கோயிலில் பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப.உதயகுமார், மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணிப் பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் த.மணிமொழியன், அ.ம.மு.க. வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் த.செகதீசன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர்ராசு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவரவர் ஊர்களிலிருந்து, அவரவர் இல்லத்தின் முன் கறுப்புக் கொடி ஏந்தியும், கோரிக்கைப் பதாகை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை அண்ணா நகரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன் தலைமையிலும், இலாயம் பகுதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ.இராமசாமி தலைமையிலும், தஞ்சாவூர் மாவட்டம் – கடம்பங்குடி பஞ்சாயத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு தனசேகரன் தலைமையிலும், பூதலூர் ஒன்றியம் – செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச்செயலாளர் பி.தென்னவன் தலைமையிலும், திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா.சின்னத்துரை தலைமையிலும், திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சூனா செந்தில் தலைமையிலும், குடந்தையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தை.செயபால் தலைமையிலும் என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


