மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிக்கையால் சந்தேகம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளைக் களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன.விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்துப் பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களைக் கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு வாடகைக் கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்திடத் தேவை இல்லை என மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது.அது மேலும் ஒருமாதகாலம் நீட்டிக்கப்படுகிறது.

கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது 3 இலட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்குப் பொருளீட்டுக் கடனைப் பெற்றிடலாம்.கடனிற்கான கால அளவு 180 நாட்கள் ஆகும்.இதர்கான வட்டி 5 சதவீதமாகும்.கடனிற்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்திடத் தேவையில்லை என ஆணையிடப்பட்டிருந்தது. அது மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றைப் பாதுகாத்து தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும்,விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கிவருகின்றன.இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேமித்து வைக்க விவசாயிகளீடமிருந்து பயன்பாட்டுக் கட்டணத்தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டும் மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் இப்பயன்பாட்டுக் கட்டணத் தொகை எதிர்வரும் 30.4.2020 வரை வசூலிக்கப்பட மாட்டாது. இக்கட்டணத் தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும். இந்தச் சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை எதிர்வரும் 30.4.2020 வரை இரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தச் சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம்கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் மே 31 வரை விவசாயிகளுக்கு சலுகை கொடுத்து முதல்வர் அறிக்கை விட்டிருப்பதால் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படலாம் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.

Leave a Response