உங்கள் பெருந்தன்மைக்குத் தலைவணங்குகிறோம் அதேநேரம் … – விஜயகாந்த்துக்கு ஊடக அமைப்பு கோரிக்கை

ஏப்ரல் 19 அன்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரது உடல் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் உரியிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பாதிப்பால் உரியிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர் யாராக இருந்தாலும் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். இப்படி இருக்கும்போது மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குச் சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

உடலை அடக்கம் செய்வதால் எந்தத் தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசும் அறிவித்துள்ளது. ஆனால், மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும் ஓட்டுநர் உள்பட மற்றவர்களைத் தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இதுபோன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்தின் இந்த அறிக்கைக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் வெளியிட்டிருக்கும் பதிவொன்றில்,

கொரோனோவால் இறந்தவர்களை புதைப்பதற்கு இடமளிப்பதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். உங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறோம். அதேவேளை,உங்களுடைய கேப்டன் தொலைக்காட்சியில்
பணியாற்றுபவர்களின், 8 மணி நேர வேலை நேரம் போன்ற, நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டுக்கொள்கிறோம்.

என்று தெரிவித்துள்ளது.

Leave a Response