பாமகவை அலட்சியம் செய்யும் அதிமுக – தொண்டர்கள் கொதிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு ஏப்ரல் 11 அன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்… கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வட்டம் மூங்கில்பாடி கிராமத்தில் குடிபோதையில் இருந்த காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து கடுமையாக தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் தம்பி சக்திவேலிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தேன். அவருக்கு சிறப்பான மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் உடல்நலம் பெற விழைகிறேன். சக்திவேலை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பா.ம.க. வழக்கறிஞர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

என்று கூறியிருந்தார்.

உடனடியாக அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து சின்னசேலம் காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) மருத்துவர் இராமதாசின் பதிவில்,

சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்.

ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை.

4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் அதிமுக தலைமை மருத்துவர் இராமதாசை அலட்சியம் செய்கிறது என்கிற கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.அதிமுக அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துங்கள், சாட்டையை சுழற்றுங்கள் என்றெல்லாம் பாமக தொண்டர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

Leave a Response