
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு நாளும் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தொடக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த விவரங்களை அறிவித்துக்கொண்டிருந்தார். அதன்பின் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்தார். சில நாட்கள் தலைமைச்செயலாளர் அறிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஓரங்கட்டப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அப்போது அவர் கூறியதாவது….
தற்போது வரை 21,994 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,739 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 34 பேர் ஒரு தொற்றைச் சேர்ந்தவர்கள். 3 பேர் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் முதுநிலை பயிற்சி மருத்துவர்.
நேற்று மட்டும் 37 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 26 சோதனை மையங்கள் உள்ளன. தினசரி தமிழகத்தில் 5,320 பேருக்கு சோதனை செய்ய முடியும். இந்தியாவில் அதிக சோதனை மையங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. நேற்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகிய இருவர் மரணம் அடைந்துள்ளார். மொத்தம் தற்போது வரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. சோதனை முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 1.5 லட்சம் பேரை குணப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள் தமிழகத்தில் உள்ளது.
1.36 ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் உள்ளது. தமிழகத்தில் சமூகத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம். குணமடைந்தவர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக மருத்துவமனையில் இருக்க வேண்டும். அவர்களின் பரிசோதனை முடிவுகள் 2 முறை நெகடிவ் வர வேண்டும். மத்திய அரசின் அறிக்கையின் படி மாவட்டத்தில் 15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள இருந்தால் அந்த மாவட்டம் “ஹாட் ஸ்பாட்” என்று குறிப்பிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின் 15 நாட்களாக உங்களைக் காணவில்லையே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, முதல்வரின் உத்தரவுப்படி தினசரி பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி வருகிறேன். அப்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வருகிறேன். முதல்வரின் உத்தரவுப்படி அதிகாரப்பூர்வ தகவல்களை அரசு செயலாளர் வழங்குவார். தேவை என்றால் தலைமைச் செயலாளர் வழங்குவார். முதல்வரும் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பார். இதில் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப்பேட்டியின் போது அவர் அடிக்கடி மாண்புமிகு முதல்வர் உத்தரவுப்படி என்று கூறியது வழக்கத்துக்கு மாறாக இருந்தது என்று சொல்கின்றனர்.


