இந்தியா என்ற அமைப்பு எதற்கு?-வைகோ கேள்வி

முல்லைப் பெரியாறு அணையில், தமிழகப் பொறியாளர் தாக்கப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்க, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டமும் 142 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கேரள அரசு மக்களை அச்சப்படுத்தும் விதமாக பொய் பிரசாரம் செய்து வருகிறது.

இதற்கு முன், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது, எப்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்ததோ, அதேபோல் தற்போதும் கேரள அரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்நேரத்தில் 142 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், வெளியேற்றும் தண்ணீரின் அளவை குறைக்காமல் திறந்துவிடப்படுகிறது. வைகை அணைக்கு தற்போது அதிக தண்ணீர் திறந்துவிடக் காரணம் என்ன. பொறியாளர்களுக்குத் தான் அந்த ரகசியம் தெரியும்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடிக்கு தண்ணீரைத் தேக்க ஒரு வாய்ப்பு கிடைத்த சமயத்தில், அதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம்.

இன்று (திங்கள்கிழமை) மாலை கேரளத்தின் பீர்மேடு தொகுதியின் பெண் எம்.எல்.ஏ.வான பிஜூமோள் என்பவர், 50 பேர்களுடன் அணைக்கு வந்துள்ளார். அவரைத் தடுத்த, தமிழகப் பொறியாளர் மாதவனை, அக்கும்பல் தாக்கியுள்ளது. அதன்பின்னர், அந்தக் கும்பல் பேபி அணையில் தண்ணீர் கசிவுள்ள பகுதியை சேதப்படுத்தி, விடியோ எடுத்துள்ளது.

பொறியாளர் தாக்கப்பட்டதற்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, பொறியாளர் தாக்கப்படவில்லை என பொறியாளரை வைத்தே கூறியுள்ளனர்.

கேரள அரசை எச்சரிக்கின்றேன். நொய்யல் ஆற்று கால்வாயில் 2000 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. தண்ணீர் தரவில்லை. செண்பகவல்லி தடுப்பணையை சீர்செய்ய தமிழகத்தை அனுமதிக்கவில்லை. இப்போது, அமராவதிக்கு வரும் தண்ணீரைத் தடுக்க பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டப் போகிறதாம் கேரள அரசு.

கேரள மக்களை குறை கூறவில்லை. அங்குள்ள சில அரசியல் கட்சியினரை குறை கூறுகிறேன். இந்தியாவில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்குச் செய்யும் அக்கிரமத்தை தடுக்காவிட்டால், மத்திய அரசு எதற்கு. இந்தியா என்ற அமைப்பு எதற்கு என்ற கேள்வியை முன்வைக்கிறேன் என்றார்.

Leave a Response