பிரசவ நேரத்தில் இளம்பெண் மரணம் – கலங்கி நின்ற குடும்பத்துக்கு கனிமொழி செய்த உதவி

தூத்துகுடி மாவட்டம் வெட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்திற்காக கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். ஆனால் அப்பெண் அகால மரணமடைந்துவிட்டார். அவருடைய உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர வழிதெரியாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கலங்கி நின்ற வேளையில் தகவலறிந்த கனிமொழி அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

தூத்துக்குடி மாவட்டம் வெட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி பிரசவத்திற்காக கோயம்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை (ஏப்ரல் 4) தாயும் சேயும் மருத்துவமனையிலேயே காலமாகினர் என்ற வருத்தமான செய்தி வந்தது.

இந்நிலையில் நான் வைத்த வேண்டுகோளுக்கிணங்க, உடனே செயல்பட்டு காலமானவரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தூத்துக்குடி வரை செல்ல இலவச அமரர் ஊர்தியும், அக்குடும்பத்தினர் பயணிக்க வாகனமும், மாவட்ட ஆட்சியாளரிடம் தூத்துக்குடி வரை செல்ல அனுமதிக் கடிதங்களும், அரசு மருத்துவமனையின் சான்றிதழ்களும் வாங்கிக்கொடுத்த கோவை மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சகோதரி நா.மாலதிக்கு என் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Response